மக்கள் கேள்வி மேல கேள்வி கேட்பாங்களே... அரசு உங்க கோரிக்கையை நிறைவேற்றுமா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
மக்களுக்கு அரசின் சேவைகள் தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற முதல்வரின் அக்கறை பாராட்டத்தக்கது. அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதற்காக, பொது சேவை பெறும் உரிமை சட்ட முன் வடிவை, வரும் மார்ச்சில்நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்.

சட்டம் போட்டு உரிமை எல்லாம் கொடுத்துட்டா, மக்கள் கேள்வி மேல கேள்வி கேட்பாங்களே... அரசு உங்க கோரிக்கையை நிறைவேற்றுமா?
அரசு டாக்டர்களுக்கான சட்டப் போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
தமிழகத்தில், சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாக தெரிவிக்கும்அமைச்சர் சுப்ரமணியன், உயிர் காக்கும் டாக்டர்களுக்கு உரிய ஊதியத்தை மட்டும் தர மறுப்பது ஏன்? அறவழியில் போராடிய டாக்டர்களுக்கு, '17பி' குற்ற குறிப்பாணை வழங்கி, பழி வாங்குவதும், தண்டிப்பதும், எந்த வகையில் நியாயமாகும்?'
வறுமை'யில் வாடும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, மாதச் சம்பளம் வழங்க முடியுமான்னு அரசு யோசிக்குது... 'அது'க்கே காசு இல்லாம தவிக்கும் போது, டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு தருவாங்களா என்ன?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அறிக்கை:
மத்திய அரசின் பட்ஜெட், தொழில் வளர்ச்சிக்கு வித்திடுவதோடு, பொருளாதார நிலைத்தன்மைக்கும் உதவும் என்றாலும், தேர்தலை நோக்கிய பட்ஜெட்டாக உள்ளது. நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரிச்சலுகை, அரசு ஓய்வூதியர்களுக்கான சலுகை போன்றவை வரவேற்கத்தக்கவை. தமிழகத்திற்கு புதிய திட்டம் அறிவிக்காதது, மிகுந்த வேதனையை அளிக்கிறது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் தேர்தலுக்கான பட்ஜெட். ஆனால், தேசத்துக்கான பட்ஜெட் என்றும் கருதலாம்.
அ.தி.மு.க.,வின் பழனிசாமி அணி, இப்ப பா.ஜ.,வுக்கு நட்பா, எதிரியான்னு தெரியாத நிலையில் இருக்கறது, இவரு அறிக்கையில் தெளிவா தெரியுது!
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் பேட்டி:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு, நடப்பு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு, 345 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 70 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கிய நிலையில், தற்போது ஐந்து மடங்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி - மொரப்பூர் அகல ரயில் பாதை திட்டத்துக்கு, கடந்த ஆண்டு, 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில், தற்போது, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்ன சேலம் - கள்ளக்குறிச்சி அகல ரயில்பாதை திட்டத்துக்கு, 63.50 கோடி, ஈரோடு - பழநி அகல ரயில்பாதை திட்டத்துக்கு, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தை முழுசா புறக்கணிச்சிட்டா மாதிரி, இங்குள்ள அரசியல்வாதிகள்புலம்பிட்டு இருக்காங்களே... அவங்களுக்கு இதெல்லாம் தெரியாதா?
பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு:
பா.ம.க., ஆட்சி அமைந்தால், மாணவர்களின் படிப்புக்கு ஒரு காசு கூட கட்டணமாக செலுத்த தேவையில்லை. இலவச உயர்தர மருத்துவ சேவை அளிக்கப்படும். முதற்கட்டமாக, 1 லட்சம் கோடி ரூபாயை நீர் மேலாண்மைக்கு ஒதுக்கி, தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் தடுப்பணை கட்டி, வருங்கால சந்ததியினருக்கு வளமான தமிழகத்தை விட்டு செல்வோம்.
திட்டமெல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா, பா.ம.க., ஆட்சிக்கு வந்து, தமிழக மக்கள் இதையெல்லாம், இந்த நுாற்றாண்டில் அனுபவிக்க முடியுமான்னு தான் தெரியல!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும், காங்., வேட்பாளர் இளங்கோவன் பேட்டி:
எங்களை பொறுத்தவரை, இத்தேர்தலில் தனிப்பட்ட நபர் வெற்றி பெற்றார் என்பதை விட, தனிப்பெரும் சக்தியாக உள்ள எங்கள் கூட்டணி வெற்றி பெறுவதையே விரும்புகிறோம். என் மகன் விட்டு சென்ற பணியை தொடர்வேன்.
உடல்நிலை உட்பட பல காரணங்களால், இவரால் வீடு, வீடாகச் சென்று ஓட்டு கேட்க முடியல... கூட்டணி கட்சியினர் தான் பிரசாரத்துக்கு போறாங்க... அதுக்கு தான், கூட்டணி கட்சியினரை குஷிப்படுத்துகிற மாதிரி பேசியிருக்கார்!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:
நாத்திகவாதியான, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு நாளில், கோவில் பணத்தில் சமபந்தி போஜனம் வழங்குகின்றனர். இதற்காக அதிகாரிகள், அமைச்சர்கள் வந்து போகும் செலவு உட்பட அனைத்துக்கும், பக்தர்களின் காணிக்கை பணமே செலவிடப்படுகிறது.
இது, முற்றிலும்ஆன்மிகத்துக்கு எதிரான செயல். பசியை போக்க அன்னதானம் செய்தால், கடவுளுக்கு காணிக்கை கொடுத்த யாரும், தடை சொல்ல மாட்டாங்க!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பேட்டி:
அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்கும் பணியில் நெருங்கி விட்டோம். தனித்தனியாக இருந்தால் நல்லதல்ல; ஒன்றிணையும் சூழ்நிலை வந்து விட்டது. இடைத்தேர்தலில், என் நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்.
அரசியல் விவகாரத்துல நடிகர்ரஜினிக்கு அப்புறமா அதிக, 'சஸ்பென்ஸ்' வைக்கிறது இவங்க தான்... கடைசியா அவர மாதிரியே, இவங்களும், 'அரசியல் எனக்கு ஒத்துவராது'ன்னு ஒதுங்க போறாங்க!
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிக பணம் கொடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இதற்கு உதாரணம், ஏற்கனவே நடந்த சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தான்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயிச்சவரு, '20 ரூபாய் டோக்கன்' கொடுத்து, 'தில்லாலங்கடி' வேலையை தானே பார்த்தாரு!
வாசகர் கருத்து (2)
மத்திய அரசின் சேவைகள் திராவிட சேவைகள் என்று சொல்லித்தான் செய்து கொண்டிருக்கிறார்களே
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
ஈரோடு கிழக்கு மீண்டும் ஒரு தேர்தலுக்கு வாய்ப்பு உண்டு