மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழாவில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளும் வலைவீசி தெப்பக்குளம் மாயமானதை தொடர்ந்து ஆவணங்களின் அடிப்படையில் அதை தேடும் முயற்சியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சுவாமி சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு திருவிளையாடல் 'வலை வீசி படலம்'. மீனவப்பெண்ணாக சாபம் பெற்று புவிக்கு வந்த அன்னை மீனாட்சியை மீனவனாக வந்து திமிங்கலத்தை (நந்தி பெருமான்) கொன்று அன்னையை சுவாமி மணம் புரிந்த படலம், பெரியார் பஸ் ஸ்டாண்ட் - எல்லீஸ்நகர் பாலம் இறக்கத்தின் இடதுபுறமுள்ள வலை வீசி தெப்பக்குளத்தில் நடத்தப்படும். இதற்காக தை தெப்பத்திருவிழாவின் 8ம் நாள் அம்மனும், சுவாமியும் இக்குளத்தில் எழுந்தருளுவர்.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்த இடம் கட்டளைதாரர், கோயில் நிர்வாகம் இதில் யாருக்கு உரிமை என்ற சர்ச்சையால் நேற்று இந்த படலம் கோயில் வளாகத்தில் நடந்தது.
இடம் எங்கே
தெப்பக்குளம் மற்றும் அருகில் உள்ள 1.81 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் இருந்த காளக்கோயிலை மீட்கும் முயற்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை இறங்கியது. அதேசமயம் இந்த இடத்தில் சிலர் கட்டுமான பணியை துவக்க முயன்றனர். 'நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிடில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர்களுக்கு கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து அவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 'ரிட்' மனு தாக்கல் செய்தனர். நேற்றுமுன்தினம் விசாரணையின்போது மனுவை அவர்கள் வாபஸ் பெற்றனர். இதனால் 1.81 ஏக்கர் கோயில் நிர்வாகம் பராமரிப்பில் வருமா என கேள்வி எழுந்துள்ளது.
அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வலைவீசி தெப்பக்குளம், காளக்கோயில் முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது. காலப்போக்கில் பராமரிப்பின்றி மறைந்து போனது. தற்போது கட்டளைதாரர் பராமரிப்பில் இந்த இடம் உள்ளது. அதற்காக அந்த இடத்தை சொந்தம் கொண்டாடவோ, விற்கவோ உரிமை இல்லை.
ஆவணங்களின் அடிப்படையில் கோயில் நிர்வாகத்திற்குதான் இந்த இடம் சொந்தமானதாக இருக்க வேண்டும். அதுகுறித்து மூல ஆவணங்களை வருவாய்துறையினருடன் இணைந்து தேடி வருகிறோம். அதுவரை இந்த இடத்தில் வர்த்தக ரீதியிலான பணிகளோ, கட்டுமானமோ நடக்கக்கூடாது என சட்டரீதியாக அனுமதி பெற முயற்சித்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!