பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் கிராமத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் இரண்டு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.
இங்கு, மாளிகைக்கோட்டம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த சம்பா நெல்லை மூட்டைகளாக கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளனர்.
மேலும், டிராக்டர் டிப்பரில் கொண்டு வந்து நெல்லை தரையில் கொட்டியும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று அதிகாலை மழை பெய்தது. சிறிது இடைவேளைக்கு பின், காலை 9:00 மணியளவில் மீண்டும் பெய்ய துவங்கிய மழை மாலை வரை நீடித்தது.
இந்த திடீர் கனமழை காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு வைத்திருந்த விவசாயிகளின் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. மேலும், நேரடி கொள்முதல் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்லும் நனைந்துள்ளது.
இதேபோன்று, வெண்கரும்பூர், கீரனுார், அரியராவி, கிளிமங்கலம் பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் மழை காரணமாக நெல் மூட்டைகள் நனைந்துள்ளது. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதற்கிடையில், மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பால், விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
மாளிகைக்கோட்டம் கிராம விவசாயிகள் கூறுகையில், 'நாங்கள் கடந்த வாரம் அறுவடை செய்த சம்பா நெல்லை விற்பதற்காக, டிராக்டர் டிப்பரில் கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளோம்.
கொள்முதல் செய்ய தாமதமானதால், நேற்று காலையில் பெய்த மழைக்கு தரையில் கொட்டி வைத்துள்ள நெல் நனைந்துள்ளது.
மழையில் நனைந்ததால் நெல்லில் ஈரப்பதம் சேர்ந்துள்ளது. இதனால், கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கொள்முதல் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
விருதையிலும் பாதிப்பு
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு தினசரி 5 ஆயிரம் முதல், 20 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை தற்போது வருகிறது. அதனை, விவசாயிகள் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் திறந்த வெளியில் வைத்து வியாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். கடந்த 2 நாட்களில் மார்க்கெட் கமிட்டிக்கு 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வந்துள்ளது.
இந்நிலையில், விருத்தாசலம் பகுதியில் நேற்று பெய்த திடீர் மழையினால், திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமாகின. இதனால், பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், விவசாயிகளின் மூட்டைகளை அடுக்கி வைக்க போதுமான குடோன்கள் உள்ளது. ஆனால், குடோன்களை வியாபாரிகள் ஆக்கிரமித்து தங்களின் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்கின்றனர்.
இதனால், விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைத்து வீணாவது தொடர்கதையாக உள்ளது.
மேலும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளதால், அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் நலன் கருதி, வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ள குடோன்களில், விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!