ADVERTISEMENT
விக்கிரவாண்டி-'பள்ளி பருவத்தில் மாணவர்கள் முறையாக கல்வியை கற்று எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்' என கலெக்டர் பேசினார்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை ஆதிதிராவிட நல பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது.
மாவட்ட ஆதி திராவிட நலம் மற்றும் பழங்குடி நல அலுவலர் பத்மலதா வரவேற்றார். எஸ்.பி., ஸ்ரீநாதா, கூடுதல் கலெக்டர் பயிற்சி லாவண்யா, டி.எஸ்.பி., பார்த்திபன், விழிப்புணர்வு குழு தலைவர் டாக்டர் குமரவேல், பி.டி.ஓ., சுமதி, தாசில்தார் இளவரசன், ஆதிதிராவிட நல தனி தாசில்தார் உமா மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவிற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசுகையில், 'கல்வியின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கு ஒரு வரலாற்றை தெரிவிக்கின்றேன்.
வீரன் பகத்சிங் ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் சிறையில், புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பார். துாக்கு தண்டனை விதிக்கும் நாள் வந்த போது, ஜெயிலர், பகத்சிங்கிடம், இன்று உனக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப் போகிறோம். கடைசி விருப்பம் என்ன என்று கேட்டார்.
அதற்கு பகத்சிங், இந்த புத்தகம் 350 பக்கங்களைக் கொண்டது. இதில் இன்னும் 45 பக்கங்கள் படிக்க வேண்டும். அது தான் எனது கடைசி ஆசை என்றார். அதே போன்று, அவர் படித்து முடித்ததும் அவரை துாக்கு மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர் தலை நிமிர்ந்து நடந்து சென்றார். அவரின் செயலைப் பார்த்து அதிகாரி வியந்து நின்றார்.
கடைசி நேரத்தில் கூட படிப்பிற்காக தலை குனிபவர்களே வாழ்நாளில் தலை நிமிர்ந்து வாழ்வர். காரணம் அவரிடம் கல்வி இருக்கிறது. கல்வி ஒருவனை கடைசி வரை காப்பாற்றும். மாணவர்களாகிய நீங்களும் பள்ளி பருவத்தில் முறையாக கல்வியை கற்று எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் மோகன் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
படிக்காதவன் சுய மரியாதையுடன் வாழ்கிறான். படித்தவன் அடிமையாக வாழ்கிறான்...