Load Image
Advertisement

ஆரணி ஆற்றங்கரையை சுத்தப்படுத்த திட்டம்!: மலை குப்பையை அகற்ற நிதி ஒதுக்கீடு

Project to clean Arani river bank!: Fund allocation for removal of mountain garbage, decision to destroy it by bio-mining method    ஆரணி ஆற்றங்கரையை சுத்தப்படுத்த திட்டம்!: மலை குப்பையை அகற்ற நிதி ஒதுக்கீடு
ADVERTISEMENT
பொன்னேரி--பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட ஆரணி ஆற்றங்கரையோரங்களில், மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை, 'பயோ மைனிங்' முறையில் அகற்ற, நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. பல ஆண்டு பிரச்னைக்கு விமோசனம் கிடைக்க உள்ளதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி யில், 27 வார்டுகளில், 10 ஆயிரத்து 27 குடியிருப்புகள், 1,721 வணிக நிறுவனங்கள், 14 திருமண மண்டங்கள், மூன்று திரையரங்குகள் உள்ளன.

மேற்கண்டவைகளில் இருந்து, தினமும், சராசரியாக 11 ஆயிரம் கிலோ குப்பைக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

குடியிருப்புப் பகுதிகளில், துாய்மை பணியாளர்கள் வாயிலாக தள்ளுவண்டிகளில் குப்பை சேகரிக்கப்படுகின்றது.

கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட வணிக பயன்பாட்டில் உள்ள இடங்களில், நகராட்சி லாரிகளில் சேகரித்து குப்பைக் கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது.

பொன்னேரி, திருவாயற்பாடியில், ஆரணி ஆற்றின் கரையோரம் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் உள்ள வளம் மீட்பு பூங்காவில், குப்பைக் கழிவுகள் தரம் பிரிக்கப்படுகின்றன.

இதில், மக்கும் குப்பையில் இருந்து இயற்கை மற்றும் மண்புழு உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரிப்பவற்றில், மூன்று ஒரு பகுதி குப்பைக் கழிவுகள் தரம் பிரித்து கையாள முடியாமல், ஆரணி ஆற்றங்கரையோரங்களிலும் குவிக்கப்படுகின்றன.

மேலும், தனி நபர்கள், வணிக நிறுவனங்கள், அருகில் உள்ள கிராமங்கள் ஆகியவற்றின் குப்பைக் கழிவுகளும் ஆற்றில் கொட்டி குவிக்கப்படுகின்றன.

இவ்வாறாக, பொன்னேரி - பஞ்செட்டி சாலையில், ஆரணி ஆற்றின் கரையோரம், பல ஆண்டுகளாக குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு அவை மலைபோல குவிந்து கிடக்கின்றன.

அவற்றை அவ்வப்போது தீ வைத்து எரிப்பதால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளால், பல்வேறு சுற்றுச்சுழல் பாதிப்புகளும் உருவாகி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து, அங்கு குவிந்துள்ள குப்பைக் கழிவுகள் அகற்ற திட்டமிட்டு, அது குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

அங்கு, 26 ஆயிரத்து 435 கன அடி அளவில், குப்பைக் கழிவுகள் குவிந்து கிடப்பது தெரிந்தது. அவற்றை 'பயோ மைனிங்' முறையில் முழுமையாக அகற்ற திட்டமிடப்பட்டு, அதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

அதன்படி, 'துாய்மை இந்தியா' திட்டத்தின்கீழ், 1.86 கோடி ரூபாயில் அவற்றை அகற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடுத்த சில தினங்களில், தனியார் நிறுவனம் வாயிலாக, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் வாயிலாக, பல ஆண்டுகால பிரச்னைக்கு விமோசனம் கிடைக்க உள்ளது. இப்பணிகள் நிறைவுற்றால், இனி ஆற்றில் குப்பைக் கழிவுகள் கொட்டாமல் கண்காணிக்கவும், நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

மேலும், அன்றாடம் சேகரிக்கப்படும், குப்பைக் கழிவுகளை தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, மக்கும், மக்காதவை என தரம் பிரித்து கையாளப்பட உள்ளது.

இதற்காக, ஆண்டிற்கு, 2.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது.

அந்நிறுவனத்தில், வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பவர்கள், ஓட்டுனர்கள், மேற்பார்வையாளர்கள் என, 95 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்நிறுவனம் பணிளை மேற்கொள்ளவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து பொன்னேரி நகராட்சி கமிஷனர் எஸ்.கோபிநாத் தெரிவித்ததாவது:

ஆற்றங்கரையோர பகுதிகளில் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளை முழுமையாக அகற்றி, அப்பகுதிகளை துாய்மையாக மாற்ற உள்ளோம். 'பயோ மைனிங்' முறையில் பிரத்யேக இயந்திரங்களை கொண்டு, குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளில் உள்ள மண், கல், 'பிளாஸ்டிக், ரப்பர்' என தனித்தனியாக பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்பப்பட உள்ளது.

பணிகள் துவங்கிய ஆறு மாதத்திற்குள் தரம் பிரித்து, முழுமையாக அகற்றி விடுவோம். அதன் பின், ஆற்றங்கரையோர பகுதிகளில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவது முற்றிலும் தடுக்கப்படும்.

தமிழக அரசு அறிவித்துள்ள நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும், 'என் குப்பை என் பொறுப்பு' என்பதன் அடிப்படையில், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் குப்பைக் கழிவுகளை மக்கும், மக்காதவை என தரம் பிரித்து தனித்தனியாக வழங்க வேண்டும்.

குப்பைக் கழிவுகளை சேகரிக்க வரும் நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் மட்டும் அவற்றை வழங்க வேண்டும். சாலைகளில் அவற்றை கொட்டக்கூடாது. நகராட்சியை துாய்மையாகவும், சுற்றுச்சுழலை பாதுகாக்கவும், பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'பயோ மைனிங்' என்றால் என்ன?

'பயோ மைனிங்' என்பது சுற்றுச்சுழலுக்கு நன்மை தரக்கூடிய தொழில் வடிவம். குப்பையை கிளறி, இயந்திரத்தில் கொட்டி, 'கன்வேயர்' வாயிலாக பிளாஸ்டிக், இரும்பு, மண், துணி, கல், கண்ணாடி என தனித்தனியாக பிரிக்கப்படும். மக்கும், மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தெடுக்கப்படும். மக்கும் குப்பையை உரமாகவும், மக்காத குப்பையை மறுசுழற்சிக்கும் அனுப்பப்படும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement