ADVERTISEMENT
லண்டன்: வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் அமைச்சரும், பழமைவாத கட்சியின் தலைவருமான நதிம் ஸஹாவியை பதவி நீக்கம் செய்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நேற்று உத்தரவிட்டார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் அமைச்சரவையில், இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகிப்பவர் நதிம் ஸஹாவி. மேற்காசிய நாடான ஈராக்கில் பிறந்த நதிம், ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவர் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சராக பதவி வகிப்பவர் அமைச்சக ஒழுக்க சட்ட விதிகளை மீறியதால் பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்த விவகாரம் குறித்து பிரதமரின் தனிப்பட்ட ஒழுக்க ஆலோசகர் சர் லாரி மேக்னஸ் விசாரணை நடத்தி, பிரதமரிடம் அறிக்கை அளித்தார்.
அதில், அமைச்சக ஒழுக்க விதிகளை நதிம் மீறியிருப்பதால் அவர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது ஆலோசனையை ஏற்று, அமைச்சர் நதிம் ஸஹாவியை அமைச்சர் பதவி மற்றும் பழமைவாத கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, பிரதமர் ரிஷி சுனக் நேற்று உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!