ADVERTISEMENT
மதுரை : போதைப் பொருள் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்க 100 கி.மீ., சுற்றளவில் அல்லது 4 மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை உட்பட தென்மாவட்டங்களை சேர்ந்த சிலர் கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2021ல் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி பி.புகழேந்தி: குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தில் ஈடுபடவில்லை; அவர்கள் எதையும் செய்ய வாய்ப்பில்லை என நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இல்லாவிடில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமின் மறுக்கப்படுகிறது. இருப்பினும் இறுதி அறிக்கையை போலீசார் குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யாவிடில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஜாமின் பெற தகுதியுடையவர்களாகின்றனர். சட்டப்படி இறுதி அறிக்கையை 90 முதல் 180 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு முடியாவிடில் சம்பந்தப்பட்ட நீதிமன்றம்ஓராண்டு வரை அவகாசம் வழங்க வேண்டும்.
'தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மூன்று மாதங்களில் 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்து, 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகளைச் சுற்றியுள்ள இடங்களில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் மற்றும் மனமகிழ்வூட்டும் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்' என முதல்வர் சட்டசபையில் தெரிவித்துள்ளார். 180 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை, சேலம், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் போதைப்பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இவை தொலைதுாரங்களில் உள்ளன. இதனால் போலீசார் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் சிரமத்தை ஏற்படுத்தும். புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்ற அதிகார வரம்பில் விருதுநகர் மாவட்டம் வருகிறது. விருதுநகர் மாவட்ட போலீசார் மதுரையை கடந்த பின்தான் புதுக்கோட்டைக்கு செல்ல வேண்டியுள்ளது. 100 கி.மீ., சுற்றளவில் அல்லது 4 மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம். இதனால் போலீஸ் ஸ்டேஷன்கள், சிறப்பு நீதிமன்றங்களுக்கு இடையிலான துாரம் குறையும். இது போலீசார் விசாரணையை திறம்பட தொடர உதவும். மாவட்டங்களிலுள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக செயல்படும் சாத்தியக்கூறுகளை ஆராயலாம்.
இங்கு மனு நிலுவையில் இருந்த காலகட்டத்தில் மனுதாரர்கள் அந்தந்த சிறப்பு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து சட்டப்பூர்வ ஜாமின் பெற்றுள்ளனர். இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. மனுக்கள் பைசல் செய்யப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!