'அண்ணாமலை முடிவு சரி தானே!'
சிவகங்கை லோக்சபா தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி, சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கூறுகையில், 'கொள்கை, சித்தாந்த ரீதியாக, பா.ஜ.,வில் அண்ணாமலை சேரவில்லை. பொது வாழ்க்கைக்கு வர, தமிழகத்தில் ஏதேனும் அரசியல் கட்சியில் சேர, 'ரோந்து' வந்தார்.'ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்தார்; அவர் ஆரம்பிக்காததால், திடீரென பா.ஜ.,வில் சேர்ந்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில், குறைந்தபட்சம் பதிவாகும்ஓட்டுகளில், 65 சதவீத ஓட்டுகளை பெற்று, காங்., வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார். இந்த யதார்த்த உண்மையை அண்ணாமலை புரிந்து கொண்டதால் தான், பா.ஜ., போட்டியிடவில்லை' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'கள நிலவரம் அறிந்து, தேர்தல்களத்தில் கால் வைப்பது தான், சிறந்த அரசியல்வாதிக்கு அழகு... இது தெரியாம களமிறங்கி, காங்.,பலமுறை படுகுழியில் விழுந்திருக்கு... அந்த வகையில், அண்ணாமலையின் தற்போதைய முடிவு சரி தானே...' என முணுமுணுக்க, மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையாட்டினர்.
'நுழைய வாய்ப்பில்லை!'
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் வந்தார்.அவர் அளித்த பேட்டியில், 'லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் போட்டியிடுவேனா என்பதும் கேள்விக்குறி தான். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
'அ.தி.மு.க., இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டில்லி தான் காரணம். டில்லி நினைத்தால் மட்டுமே, மீண்டும் அ.தி.மு.க., ஒன்று சேர முடியும். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்' என்றார்.கட்சி நிர்வாகி ஒருவர், 'தேர்தலில் தோற்றாலும், கட்சியை கட்டுப்பாட்டில் வைப்பது தான் முக்கியம்னு முடிவெடுத்து, பழனிசாமி தெளிவா, கறாரா வேலையை துவங்கிட்டாரு... இதுல டில்லி இல்ல... யாரு நினைச்சாலும், நாம மீண்டும், அ.தி.மு.க.,விற்குள் நுழைய வாய்ப்பில்லை போலிருக்கே...' என, முணுமுணுக்க, மற்றவர்கள், 'உச்' கொட்டியவாறு நகர்ந்தனர்.
'கையில பிடிக்க முடியாது போல!'
கடலுார் மாவட்டம், நெய்வேலியில் நடந்த காங்., ஆலோசனை கூட்டத்தில், தமிழக காங்., தலைவர் அழகிரி பங்கேற்றார். அவர் பேசுகையில், 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை, காங்., கட்சி அறிவித்து விட்டது. அ.தி.மு.க., நான்காக பிரிந்து, அனைவரும் போட்டியிட இருப்பதாக கூறுகின்றனர்.
'பா.ஜ., இருக்கும்இடமே தெரியவில்லை. இந்த இடைத்தேர்தலில், காங்., அமோக வெற்றி பெறும்; அதற்காக நாங்கள் போராடுகிறோம். ஆனால், நம்மை எதிர்க்க, தேர்தல்
களத்தில் எதிரிகளையே காணவில்லை' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க., முதுகில் சவாரி செய்யும் போதே, இவரு இவ்வளவு பேசுறாரே... தனித்து போட்டியிடும் அளவுக்கு தமிழகத்துல கட்சியை வளர்த்துட்டா, 'கை' சின்னத்துக்காரங்களை கையில பிடிக்க முடியாது போல...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.
இன்னும் கூட்டணியை விட்டு ஒரேயடியாக கழன்று கொள்ளவில்லை. அப்படியும் இடைத்தேர்தலில் பணத்தைக்கொத்த யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என போட்டியிடவில்லை என்கிறார். கணிசமான சீட்டுகளுக்காக அந்த நிதியை சேமிக்கும் எண்ணம் இருக்கலாம்