Load Image
Advertisement

விமோசனம் வந்தாச்சு! எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விறுவிறு

Tamil News
ADVERTISEMENT
கோவை,-10 ஆண்டுகளுக்கு பின், கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலத்துக்கு விமோசனம் கிடைத்திருக்கிறது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதை தொடர்ந்து, அணுகு சாலை அமைப்பதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை துவங்கியுள்ளது.

கோவை, ஒண்டிப்புதுாரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனிக்குச் செல்ல, 2013ல், 21.16 கோடி ரூபாயில், 27 துாண்களுடன் ரயில்வே உயர்மட்ட பாலம் கட்டும் பணி, மாநில நெடுஞ்சாலைத்துறையால் (நபார்டு) துவக்கப்பட்டது. அணுகு சாலைக்கு போதிய இடம் ஒதுக்காமல், 30 அடி அகலத்துக்கு பாலம் கட்ட ஆரம்பித்ததால், அப்பகுதி பொதுமக்கள், கோர்ட்டுக்குச் சென்றனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, 'ஆறாவது துாண் வரை, 600 மீட்டர் துாரத்துக்கு அணுகு சாலை அமைத்தபின், மேம்பாலம் வேலையை தொடர வேண்டும். இழப்பீடு வழங்கிய பிறகே, நிலம் கையகப்படுத்த வேண்டும். அதுவரை பணியை நிறுத்தி வைக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

இவ்வழக்கு ஆண்டுக்கணக்கில் இழுத்ததால், தீர்வு காண முடியாமல் நெடுஞ்சாலைத்துறையினர் திணறினர். அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நில உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்த ஆர்வம் காட்டாததால், மேம்பால பணி பாதியில் நின்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த திட்டம் என்பதால், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மேம்பாலம் கட்டுமான பணியை மீண்டும் துவக்க வேகம் காட்டப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க, 29 கோடியே, 37 லட்சத்து, 87 ஆயிரத்து, 910 ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டது.

நில உரிமையாளர்களை, மாநில நெடுஞ்சாலைத்துதுறை அதிகாரிகள் தனித்தனியாக பேசி, சம்மதம் பெற்றனர். இதுவரை, 23 கோடியே, 23 லட்சம் ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது. மொத்தம், 12 கட்டடங்கள், 6 இடங்களில் சுற்றுச்சுவர் இடிக்க வேண்டும்.

மாநில நெடுஞ்சாலைத்துறையினர், நில அளவீடு செய்து, குறியீடு செய்திருக்கின்றனர். கட்டட உரிமையாளர்களே இடித்துக் கொள்கின்றனர். சில இடங்களில், நெடுஞ்சாலைத்துறையினர் இடிக்கின்றனர். கல்யாண மண்டபம் அமைந்துள்ள இடத்தில் டிரான்ஸ்பார்மரை சற்று தள்ளி வைக்க வேண்டியுள்ளது. நிலம் கையகப்படுத்தியதும் அதற்கான வேலை துவங்க உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மொத்தம், 3,860 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்த வேண்டும்; 3,030.50 சதுர மீட்டர் கையகப்படுத்தி விட்டோம். கோர்ட்டுக்கு சென்றவர்களுக்கு சொந்தமான நிலத்துக்கான தொகையும் கணக்கிடப்பட்டு, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. மேம்பாலத்தில் மீதமுள்ள பணிகளை மேற்கொள்ள, 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மூன்று இடங்களில் ஓடுதளம், அணுகுசாலை, இறங்கு தளம் அமைப்பதோடு, மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தப்படும்' என்றனர்.

10 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த பிரச்னைக்கு விமோசனம் கிடைத்திருக்கிறது. மேம்பாலம் பணி முடிந்தால், இப்பகுதியை சேர்ந்த, 30 ஆயிரம் மக்கள் பயனடைவர்.

ரூ.52.40 கோடி ஒதுக்கீடு; தாமதத்தால் நிதி அதிகரிப்பு

தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, ஒண்டிப்புதுார்- - எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி ரோட்டில் கடவு எண்: 4க்கு பதிலாக மேம்பாலம் கட்ட, 2010 நவ., 10ல் அரசாணை வெளியிடப்பட்டு, 19 கோடியே, 24 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. டெண்டர் கோரப்பட்டு, பணியை துவக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.அ.தி.மு.க., ஆட்சியில், மூன்று ஆண்டுகள் தாமதித்து, 2013ல் வேலை துவக்கப்பட்டது. அதனால், திட்ட மதிப்பீடு தொகை, 21.16 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணுகு சாலைக்கு நிலம் கையகப்படுத்தாமல் மேம்பாலம் கட்டியதால், கோர்ட் தலையிட்டு, பணியை நிறுத்தியது.10 ஆண்டுகளுக்கு பின், தற்போது இழப்பீடு வழங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நிலம் கையகப்படுத்த மட்டும் ரூ.29.37 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது, ஒட்டுமொத்தமாக, இப்பாலத்துக்கான மதிப்பீடு ரூ.52.40 கோடியாக அதிகரித்திருக்கிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement