Load Image
Advertisement

தகவல் சுரங்கம் - ஜன. 26, 27, 28

தகவல் சுரங்கம்

----

ஜன. 26

உலக சுங்கதுறை தினம்

உலக சுங்கத்துறை கழகம் 1952 ஜன. 26ல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் 183 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்செல்ஸ் நகரில் உள்ளது. அனைத்து நாடுகளிலும் சுங்கத் துறை உள்ளது. இத்துறை அதிகாரிகளின் சேவை முக்கியமானது. போதைப்பொருள், தங்கம் உட்பட சட்ட விரோத கடத்தலை தடுப்பது, சுற்றுச்சூழல் பாதுகாத்தல், நாட்டின் நலனை பாதுகாத்தல் உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இவர்களை பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜன. 26ல் உலக சுங்கத்துறை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

***

ஜன. 27

முதலை பறவை

'ப்ளுவியானிடே' குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப்பறவை. தலைப்பகுதி கறுப்பு, உடல் பழுப்பு, கால்கள் நீலம், வயிற்றுப்பகுதி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இதன் நீளம் 21 செ.மீ. இவை பொதுவாக முதலைகளின் பற்களில் சிக்கியிருக்கும் இரையின் எச்சங்களை உண்கின்றன. இதன் மூலம் முதலையின் பற்களைச் சுத்தம் செய்கின்றன. முதலையின் வாய்க்குள் அமர்ந்து, அதன் பற்களில் சிக்கியுள்ள இறைச்சியை உண்ணும். அப்போது இப்பறவையை, முதலை எதுவும் செய்வதில்லை. முதலையின் பற்களில் உள்ள இரை, புழுக்களை உண்பதால் 'முதலைப் பறவை' என அழைக்கப்படுகிறது.

****

ஜன. 28

தகவல் தனியுரிமை

இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலான தகவல் சேமிப்பு, பரிமாற்றங்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. இதனால் ஒருவரது தகவல் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தகவல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜன. 28ல் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், நைஜீரியா, ஐரோப்பாவில் 47 நாடுகளில் தகவல் தனியுரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் அதிகரித்து இணைய குற்றங்களை தடுப்பதற்கு தரவு பாதுகாப்பு அவசியமாகிறது.

***

அறிவியல் ஆயிரம்

----

ஜன. 26

பூமிக்கு அருகே விண்கல்

பூமியின் மேற்பரப்பில் இருந்து 3379 கி.மீ., தொலைவில் '2023 பி.யு.' என்ற விண்கல் நாளை (இந்திய நேரம் : ஜன. 27 காலை 6:00 மணிக்கு) கடந்து செல்கிறது. இது மணிக்கு 53,591 கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது. இது 2023 ஜன. 21ல் கண்டறியப்பட்டது. இதன் அகலம் 27.8 அடி. நீளம் 12.4 அடி. பெரும்பாலான விண்கல் நிலவுக்கு அப்பால் (பூமியில் இருந்து 3.86 லட்சம் கி.மீ., தொலைவு) கடந்து செல்லும். ஆனால் 300 ஆண்டுகளில் இல்லாத வகையில் பூமிக்கு அருகே (3379 கி.மீ.,) இது கடக்க உள்ளது. விண்கல் வரலாற்றில் பூமிக்கு அருகே குறைந்த தொலைவில் கடக்கும் நான்காவது விண்கல் இது.

***

ஜன. 27

'டயர்' நிறத்தின் ரகசியம்

அனைத்து வாகன சக்கரங்களின் டயர் கறுப்பாகவே உள்ளது. டயர் தயாரிக்கப் பயன்படும் ரப்பர், வெண்மை நிறம் கொண்டது. ஆரம்ப காலத்தில் தேய்மானத்தைத் தாக்குப் பிடிக்க கறுப்பாக இருக்கும் புகைக்கரி, பருத்தி நுாலை, இதனுடன் கலந்து டயர் தயாரித்தனர். தற்போது 'கார்பன் பிளாக்' பொருளைச் சேர்க்கின்றனர். உராய்வு காரணமாக, டயரில் ஏற்படும் வெப்பத்தை 'கார்பன் பிளாக்' கடத்தி டயருக்கு நீண்ட ஆயுளைத் தருகிறது. மேலும் புறஊதாக் கதிர்கள் ரப்பரை எளிதில் சிதைத்து விடாமலும் பாதுகாக்கிறது. எனவேதான் டயர்கள் கறுப்பு நிறத்தில் உள்ளன.

***

ஜன. 28

பாக்டீரியாவின் தேவை

'பாக்டீரியான்' கிரேக்க சொல்லுக்கு 'சிறு குச்சி' என பொருள். பாக்டீரியங்கள் அளவில் மிக நுண்ணியவை. அவற்றை நுண்நோக்கியில் தான் காண முடியும். பல நோய் உருவாகக் காரணமாக இருந்தாலும் பால் புளிப்பதற்கும், வியர்வை நாற்றம் அடிப்பதற்கும், பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி பெரும்பாலான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்கவும் காரணம் இவைதான். அது போல இறந்து போன தாவரம், மிருகம், பல வித கரிம கழிவுப் பொருட்களை அழுகச் செய்வதில் இயற்கைக்கும் பாக்டீரியாவின் தேவை அதிகமிருக்கிறது. நம் உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எடை சுமார் 1.8 கிலோ.

***
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement