கொடி நாள் நிதி வசூலில் கோவை டாப்: கவர்னர் மாளிகையில் இன்று விருது
கோவை: நிர்ணயித்த இலக்கைவிட கொடி நாள் நிதிஅதிகம் வசூலித்த கோவை மாநகராட்சிக்கு இன்று சிறந்த விருது வழங்கப்படுகிறது.
நாட்டை காக்கும் முப்படை வீரர்களின் நலனை காக்க, நிதி திரட்டும் வகையில் ஆண்டுதோறும் டிச., 7ம் தேதி கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. பொது மக்கள், அரசு அதிகாரிகள்உள்ளிட்டோரிடம் பணம் வசூலித்து, படை வீரர் நலனுக்காக இந்நிதி வழங்கப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்கு, 2021ம் ஆண்டுக்கு, 15 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிர்ணயித்ததைவிட, கொடி நாள் நிதி தொகையாக, 43 லட்சத்து, 22 ஆயிரத்து, 820 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இத்தொகை நிர்ணயித்த இலக்கை விட, 181 சதவீதம் அதிகம். சிறப்பான முறையில் நிதி வசூல் செய்தமைக்காக, இன்று சென்னை கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில், கவர்னர் ரவி வழங்கும் விருதை, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பெற்றுக்கொள்கிறார்.
மாவட்ட அளவில் சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர்; மாநகராட்சி அளவில் கோவை மாநகராட்சியுடன், சென்னை மாநகராட்சி ஆகியன அதிகபட்ச வசூல், சிறந்த வசூல் விருதுகளை பெறுகின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!