தேர்தலில் நிச்சயம் வாக்களிப்பேன்: தேசிய வாக்காளர் தினத்தில் சபதம்
கோவை: ஒவ்வொரு ஆண்டும் ஜன., 25ம் தேதி, தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தி, ஓட்டளிப்பதை கடமையாக கருத வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
இதை முன்னிட்டு, 'வாக்களிப்பதே சிறந்தது; நிச்சயம் வாக்களிப்பேன்' என்கிற கோஷத்துடன், கோவை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கலெக்டர் சமீரன் உறுதிமொழி வாசிக்க, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மகளிர் குழுவினர், அரசு அலுவலர்கள் ஏற்றனர்.
கலெக்டர் கூறுகையில், ''தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 18 வயதானவர்கள் ஓட்டளிக்க, பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வலுவான ஜனநாயகத்தை உருவாக்கும் வகையில், 100 சதவீதம் ஓட்டளித்து, ஜனநாயக கடமையாற்ற வேண்டும்,'' என்றார்.
வர்ண கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் குழு உறுப்பினர்கள், சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தேர்வு தரவு உள்ளீட்டாளர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சுவர் ஓவியப்போட்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தரணிஸ்ரீ, சந்தியா இரண்டாமிடம், ஜீவிதா. பள்ளி மாணவர்கள் பிரிவில் திவாகர், சிவசுப்ரமணியன், மரியம், கல்லுாரி மாணவர்கள் பிரிவில் ஹர்சினி, ஹியாத்துல்லா, லதார்சினி, பாட்டு போட்டியில் ஜெசிகா, பர்சானா, ஸ்ரீராம், ஸ்வேதா, லாவண்யா அகல்யா, சாய் கார்த்திக், மார்க் ரிச்சர்ட் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவக்குமார், ஆர்.டி.ஓ., பண்டரிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!