ஆவடியில் அடாவடி அமைச்சர்
ஜெ.பாரிராஜா, சட்ட மாணவர், மதுரை: ஒரு அமைச்சர் இப்படி நடந்து கொள்வது முற்றிலும் தவறானது. மக்கள் பிரதிநிதியாக எம்.எல்.ஏ., ஆகி அனைவருக்கும் பொதுவானவராக நேர்மையாக நடப்பேன் எனக்கூறி பதவிப்பிரமாணம் எடுத்து அமைச்சரானவர் இவ்விதம் செயல்படுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அவருடைய கட்சித்தொண்டராகவே இருந்தாலும் பொது இடத்தில் கல்லால் அடிப்பது தவறானதல்லவா. அப்படியானால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு என்ன மரியாதை உள்ளது. அமைச்சர் ஒருவர் கண்ணியம் தவறி நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அமைச்சராக இருப்பவர் பொதுமக்களுக்கான பணிகளில்தான் கவனமாக இருக்க வேண்டுமே தவிர இப்படி நடப்பது அநாகரிகம். முந்தைய தி.மு.க., ஆட்சியில் நடந்தது போல இன்னும் அராஜகம் தொடர்கிறது. அமைச்சரே இதுபோல நடப்பதால் அது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, ஆள்வோர் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரை ஆவடி நாசர் என்பதைவிட அடாவடி நாசர் என்பதே பொருத்தமாக இருக்கும். ஒருவேளை இதுதான் திராவிட மாடல் போலும்.
மனித உரிமை மீறிய செயல்
கீதா, வழக்கறிஞர், மதுரை: ஒருவரை நம்பித்தான் எம்.எல்.ஏ.,வாக ஓட்டளித்து மக்கள் தேர்வு செய்கின்றனர். ஆனால் பொது வெளியில் தி.மு.க., அமைச்சர்களின் அடுத்தடுத்த செயல்பாடுகள் மக்கள் முகம் சுளிக்கும் வகையில் அமைகின்றன. இதுதான் இவர்களின் இயல்பா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொண்டர் மீது கல்வீசும் செயல் மனித உரிமையை மீறுவதாக உள்ளது. தொண்டனை இப்படித்தான் தி.மு.க., மதிக்குமா.
அமைச்சர் பதவியின் முக்கியத்துவம் தெரியாதவர்களுக்கு எல்லாம் பதவியை கொடுத்தால் கட்சியின் இமேஜ் பாதிக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஆட்சியில் தி.மு.க., என்றாலே 'அடிதடி கட்சி' என்ற 'இமேஜ்' இருந்தது. அதை ஸ்டாலின் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் பழைய ஆட்சியை நினைவுப்படுத்துவதாக உள்ளன. முதல்வர் 'அட்வைஸ்' செய்தும் ஏன் அமைச்சர்கள் இதுபோல் நடக்கின்றனர். தற்போதுள்ள ஊடக தாக்கத்தால் தாம் செய்யும் இதுபோன்ற செயல்கள் சிலநொடிகளில் மக்களிடம் சென்றுவிடும் என்ற விழிப்புணர்வுகூட இல்லையா. பொது வெளியில் சுயநினைவை இழந்து செயல்படும் நாசர் போன்ற அமைச்சர்கள் இன்னும் தொடர்ந்தால் ஸ்டாலினுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும்.
சிறுபிள்ளைத்தனமா இருக்கு
ஆர்.பி.திருப்பதி, சமூக ஆர்வலர், ஒட்டன்சத்திரம்: பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அமைச்சர் நாசர் அனைவரின் முன்னிலையிலும் இவ்வாறு அநாகரிகமாக, தரம் தாழ்ந்து நடந்து கொள்வது மிகவும் வெட்கக்கேடான செயல். பதவிப்பிரமாணம் செய்ததற்கு எதிராக இச்செயல் உள்ளது. இவர் சார்ந்துள்ளள கட்சி தலைமைக்கு பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டார். மிகவும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கிறோம். ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழரை கோடி மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்.
பதவி விலக வேண்டும்
பி.ஆர்.மணிகண்டன், வழக்கறிஞர், திண்டுக்கல்: திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த செயல் தான் சாட்சி. பொது இடத்தில் மனிதர்களை தாக்குவதை ஆட்சியாளர்களின் அராஜகத்தை உணர்த்துகின்ற செயலாக தான் மக்கள் பார்க்கிறார்கள். அமைச்சர் நாசர் வருத்தம் தெரிவித்து தானே பதவி விலக வேண்டும். இல்லையென்றால் முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதவியேற்பை மீறலாமா
கே.செந்தில்குமார், சமூக ஆர்வலர், பொம்மையக்கவுண்டன்பட்டி: தொண்டர்களை கல் கொண்டு எறிவது அநாகரிகத்தின் உச்சம். பதவி ஏற்கும் போது, இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், விருப்பு, வெறுப்பை விலக்கி அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என உறுதி மொழி எடுத்த அமைச்சர் நாசர், அதை மறந்து வெறுப்பை உமிழும் வண்ணம் செயல்பட்டது வெட்கக்கேடான ஒன்று.
மன அழுத்தமா
ஜான்சி, வழக்கறிஞர், தேனி: மக்கள் பிரதிநிதித்துவ சட்ட முறைப்படியும், அரசியலமைப்பின் விதிமுறைகளின் படியும் அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை மக்கள் பிரதிநிதிகள் மதிக்க வேண்டும். அதனை மீறி ஒரு சாதாரண நாற்காலி கொண்டு வர தாமதம் ஏற்பட்டதால் தொண்டரை கல்லால் எறிவது காட்டுமிராண்டித்தனத்தை காட்டுகிறது. ஒரு வகையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழாவிற்காக ஆய்வு செய்ய வந்த இடத்தில் மன அழுத்தம் காரணமாக அவ்வாறு நடந்திருக்கலாம். அவரும் ஒரு மனிதர்தான். ஆனாலும், அவர் வகிக்கும் பதவியால் சமூக வெளியில் முன்னுதாரணமாக திகழ வேண்டியவர் இவ்வாறு நடந்து கொண்டது தி.மு.க.,விற்கு அவப்பெயராகும்.
கைகளால் பேசலாமா
கே. செந்தில்குமார், சமூக ஆர்வலர், ராமநாதபுரம்: யாராக இருந்தாலும் அவர்களின் பதவிக்குரிய மாண்பை காக்க வேண்டும். அதிலும் மக்கள் பணியில் இருப்பவர்களுக்கு சேவை மனப்பான்மை தான் பிரதானமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த காலத்தில் பதவியும், அதிகாரமும் தான் முக்கியமாக உள்ளது. அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் தன் கண் அசைவில் வேலை வாங்க முடியும். மாறாக கைகளால் பேசுவது ஏற்புடையது அல்ல. அமைச்சர் என்பவர் தன்னை சார்ந்த அதிகாரிகள், தொண்டர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். கண் அசைவில் வேலை வாங்கும் அளவிற்கு அதிகாரிகள், ஆளுமை மிக்க பதவியில் உள்ளவர்களுக்கு நிர்வாகத் திறமை அவசியம்.
ஜனநாயகத்திற்கு எதிரான செயல்
டி.ஜெயபாண்டியன், வியாபாரி, சாயல்குடி: திராவிட கட்சிகள் ஆட்சியில் அமைச்சர்களின் அலப்பறைக்கு அளவே கிடையாது. அதுவும் தற்போதைய தமிழக அமைச்சர்களில் சிலரின் செயல்பாடு ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக நாட்டில் அமைச்சரை ஏழை மக்கள் நேரடியாக சந்திப்பது குதிரைக் கொம்பாகியுள்ளது. நாசர் பொது வெளியில் ஒரு தொண்டர் மீது கல்வீசிய செயல் பொறுப்புள்ள அமைச்சரின் பதவியை கேலிக் கூத்தாக்கியுள்ளது. ஜனநாயகத்திற்கு முரண்பாடான இதுபோன்ற செயல்களை முதல்வர் ஸ்டாலின் இனியும் அனுமதிக்கக்கூடாது.
தவறான வழிகாட்டுதல்
பி.ேஹமமாலினி பீட்டர், குடும்ப தலைவி, சிவகங்கை: தி.மு.க., ஆட்சி அமைந்ததில் இருந்தே பெரும்பாலான அமைச்சர்கள் அநாகரிகமாக தான் நடக்கின்றனர். முதல்வர் ஒரு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விட்ட பின்னரும், தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். இதுபோன்று அமைச்சர்களின் நடவடிக்கை தமிழக அரசியலை தலைகுனிய வைக்கிறது. இது இளைய சமுதாயத்திற்கு தவறான வழிகாட்டுதலாகும். 'திராவிட மாடல்' ஆட்சி என்பது இது போன்று அநாகரிகமாக அமைச்சர்கள் நடப்பது தானா.
பதவியில் இருந்து நீக்க வேண்டும்
என்.விஜயகுமார், சமூக ஆர்வலர், சிவகங்கை: தி.மு.க., அமைச்சர்களின் செயல் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லாததை காட்டுகிறது. அமைச்சர்களே அநாகரிகமாக நடப்பது அரசியலுக்கு வந்து சாதிக்க துடிக்கும் இளைஞர்களிடம் தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும். எனவே அமைச்சர்களின் இதுபோன்ற அநாகரிக நடடிக்கைகளை தமிழக முதல்வர் கண்டிப்பதோடு அவர்களை அமைச்சர் பதவியில் இருந்தே நீக்க வேண்டும்.
கல்லால் எறியலாமா
டி.முருகன், விவசாயி, விருதுநகர்: அமைச்சர் நாசர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கல்லால் எறிவது சரியல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மக்களை மதிக்காமல் கல்லை எடுத்து எறிவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. மக்களை மதிக்க வேண்டும். அதுதானே மக்கள் பிரதிநிதியின் கடமை. தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இவர்களிடம் நாளை பொதுமக்கள் வாக்குறுதி பற்றி கேட்டாலும் இப்படி தான் செய்வார்களோ என்ற அச்சம் உள்ளது.
மக்களின் நிலை பெரும் சிரமம்.
ரணவீரன், தனியார் ஊழியர், சிவகாசி: நாற்காலிகளை எடுத்து வர தாமதமானதற்காக அமைச்சர் நாசர், தனது கட்சி தொண்டர் மீதே கல் வீசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதிலும் அமைச்சர் ஏதோ சாதித்தது போல அருகில் உள்ளவர்கள் நகைப்புடன் சிரிக்கவும் செய்கின்றனர். கட்சியினருக்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலை பெரும் சிரமம்தான். பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சரே இப்படி நடந்து கொண்டால் மற்றவர்களை என்ன சொல்வது. கட்சித் தலைமை தான் பதில் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் அமைச்சர்கள் அதீத ஆர்வம் காட்டி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. அமைச்சர் பொன்முடி பெண்களை 'ஓசி பயணம் செய்கின்றனர்' என்றதோடு சில நாட்களுக்கு முன் கவர்னரை சட்டசபையிலேயே 'போய்யா' எனக்கூறும் அளவு முன்னேறிவிட்டார். அரசு நிகழ்ச்சியில் தி.மு.க., தொண்டர் ஒருவரை அமைச்சர் கே.என்.நேரு தலையில் ஓங்கி அடித்தார். தற்போது ஆவடியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அடாவடி சம்பவம் செய்துள்ளார். தனக்கு நாற்காலி எடுத்துவர தாமதமானதால் தொண்டர் மீது கல் எறிந்த இந்த அமைச்சரின் நடவடிக்கை அனைவரின் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. கண்ணியக்குறைவாக 'மாண்பு' எனும் கட்டுப்பாட்டை அமைச்சரே மீறியது தமிழகத்தை முகம் சுளிக்க வைத்துவிட்டது. 'தமிழகம்' விஷயத்தில் 'இங்கே ஒருவன்...' என முதல்வர் ஸ்டாலினே விளித்துப் பேசியதும் நடந்துள்ளதால் தமிழக அரசியலின் தரம் எங்கே போகிறது என பொதுமக்கள் கேள்வி கேட்கத் துவங்கிவிட்டனர்.
அவ்வகையில் அமைச்சர் நாசரின் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!