ADVERTISEMENT
முதுகுளத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்தூர் அருகே பொந்தம்புளி கிராமத்திற்கு சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக சாலை அமைக்கும் பணிக்காக சித்திரங்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
முதுகுளத்தூர் அருகே பொந்தம்புளி கிராமத்திற்கு செல்ல சித்திரங்குடி கிராமம் வழியே சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். ஆம்புலன்ஸ் கூட செல்ல வழி இல்லாததால் நோயாளிகளை ஆட்டோவில் அழைத்து சென்றனர். இதனால் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் பலமுறை செய்தி வெளியிட்டது. சித்திரங்குடி கிராமம் வழியாக சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆய்வு செய்தனர். சித்திரங்குடியில் உள்ள பழமையான கோயில் அருகே உள்ள மரம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிதாக சாலை அமைக்க வருவாய்த்துறை முடிவு செய்தனர்.
முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. பொந்தம்புளி கிராமத்திற்கு சித்திரகுடி கிராமம் வழியாக 180 மீட்டருக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிய போது மேலமானாங்கரை வில்வமுருகன் பொக்லைன் இயந்திரத்தின் மீது தொட்டி இடிந்து விழுந்ததால் இயந்திரம் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினர். அப்போது பணியில் இருந்த அதிகாரிகளும் தப்பி ஓடினர்.
முதுகுளத்தூர் டி.எஸ்.பி., சின்னக்கண்ணு, இன்ஸ்பெக்டர்கள் ஜான்சிராணி, இளவரசு தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சித்திரகுடி கிராமத்தை சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!