கண்டாச்சிபுரத்தை புதிய குறுவட்டமாக உருவாக்க கோரிக்கை: விக்கிரவாண்டி தாலுகா குளறுபடியால் மக்கள் அவதி
விழுப்புரம்மாவட்டத்தில், கடந்த 2011ம் ஆண்டு வரை விழுப்புரம், வானுார், திண்டிவனம், செஞ்சி ஆகிய தாலுகாக்கள் செயல்பட்டன. வருவாய் துறை நிர்வாக வசதிக்காக கடந்த 2012ம் ஆண்டு, விழுப்புரம் தாலுகாவில் இருந்து சில கிராமங்களை பிரித்து விக்கிரவாண்டி புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டது.
இதேபோன்று, திண்டிவனம் தாலுகாவில் இருந்து சில கிராமங்களை பிரித்து மரக்காணம் புதிய தாலுகாவாகவும், கடந்த 2015ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார் தாலுகாவில் இருந்து சில கிராமங்களை பிரித்து கண்டாச்சிபுரம் புதிய தாலுகாவாகவும், செஞ்சி தாலுகாவில் இருந்து சில கிராமங்களை பிரித்து மேல்மலையனுார் புதிய தாலுகாவாகவும் உருவாக்கப்பட்டது.
குளறுபடி
கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி ஆகிய தாலுகாக்களில் கிராமங்களை பிரித்து இணைத்ததில் பெறும் குளறுபடி நடந்துள்ளது. விக்கிரவாண்டி தாலுகாவில், அன்னியூர், சித்தலம்பட்டு, கஞ்சனுார், விக்கிரவாண்டி ஆகிய நான்கு குறுவட்டங்களை சேர்ந்த 115 கிராமங்களை இணைத்துள்ளனர். இதேபோல், கண்டாச்சிபுரம் தாலுகாவில் முகையூர், அரகண்டநல்லுார் குறு வட்டங்களை சேர்ந்த 62 கிராமங்களை இணைத்துள்ளனர்.
பொதுமக்கள் அவதி
இதில், விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள நல்லாப்பாளையம், கடையம், கருவாட்சி, அத்தியூர் திருக்கை, அனுமந்தபுரம், கொசப்பாளையம் உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 50 கி.மீ., துாரம் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு செல்லும் நிலை உள்ளது.
இதனால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வருவாய் துறை திட்டங்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நல்லாப்பாளையம் கிராமம், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்திற்கு 2 கி.மீ., துாரத்தில் உள்ளது.
இதேபோல், அன்னியூர் குறுவட்டத்தில் கடையம், கருவாட்சி, அத்தியூர் திருக்கை, அனுமந்தபுரம், கொசப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களும், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்திற்கு 5 முதல் 10 கி.மீ., துாரத்தில் உள்ளன. இதனால், அன்னியூர் குறுவட்டத்தை சேர்ந்த, சில கிராமங்களை கண்டாச்சிபுரம் தாலுகாவில் இணைக்க அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
புதிய குறுவட்டம்
மாவட்டத்தில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ள தலைமையிடங்களில் குறுவட்டங்கள் செயல்படுகின்றன. ஆனால், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலக தலைமையிடமான, கண்டாச்சிபுரம் பகுதி முகையூர் குறுவட்டத்தில் உள்ளது. எனவே, விக்கிரவாண்டி தாலுகா அன்னியூர் குறுவட்டத்தில் நல்லாப்பாளையம் உள்ளிட்ட 15 கிராமங்களை பிரித்தும், முகையூர் குறுவட்டத்தில் கண்டாச்சிபுரத்திற்கு அருகில் உள்ள சில கிராமங்களை பிரித்து கண்டாச்சிபுரம் புதிய குறுவட்டமாக உருவாக்க வேண்டும்.
இந்த புதிய குறுவட்டத்தை, கண்டாச்சிபுரம் தாலுகாவில் இணைப்பதன் மூலம், பொதுமக்கள் வருவாய் துறை சார்ந்த திட்டங்களை எளிதில் பெற முடியும்.
மேலும், பல கி.மீ., துாரம் உள்ள விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்கு அலையும் மக்களின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
எனவே, அன்னியூர் மற்றும் முகையூர் குறுவட்ட கிராமங்களை பிரித்து கண்டாச்சிபுரம் புதிய குறுவட்டமாக உருவாக்கி, அந்த தாலுகாவில், இணைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நமது நிருபர்-
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!