ADVERTISEMENT
மதுரை: ''முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் ஒரேநாளில் 'தட்கல் பாஸ்போர்ட்'கள் வழங்கப்படுகிறது'' என மதுரையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வி.வசந்தன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் 2021ல் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 900 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. கொரோனாவுக்குப் பின்னர் 2022ல் இது 2 லட்சத்து 27 ஆயிரத்து 811 ஆக 50 சதவீதம் அதிகரித்தது. தினமும் 1295 பேர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கின்றனர்.
விண்ணப்பங்களை பரிசீலித்து, போலீஸ் சான்று பெற்று 15 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகிறது. தபால் நிலைய பாஸ்போர்ட் மையங்களில் விருதுநகர், நாகர்கோவிலில் மட்டும் 'ஆன்லைன்' மூலம் செயல்படுகிறது. போடி, ராமநாதபுரம், தேவகோட்டை உட்பட 6 மையங்களில் 'ஆப்லைன்' மூலம் நடக்கிறது. இவற்றையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பங்களை தாமதமின்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மையங்கள் அனைத்தும் 2.0 திட்டத்தில் நவீனப்படுத்தப்பட உள்ளன. தட்கல் விண்ணப்பங்கள் விண்ணப்பித்த அன்றே வழங்கப்படும். தினமும் 80 பேர் வரை இவ்வகையில் விண்ணப்பிக்கின்றனர். இதற்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும். மூன்று வகை அடையாள அட்டை பரிசீலித்து வழங்கப்படும். போலீஸ் சரிபார்ப்பை பின்னர் செய்து கொள்வோம்.
மதுரை மண்டலத்தில் நிலுவை விண்ணப்பங்கள் 6 ஆயிரம் உள்ளன. சரியான ஆவணங்கள் இல்லாதது, குறைபாடான விண்ணப்பங்கள் என்ற வகையில் இவை உள்ளன. நிலுவை விண்ணப்பங்கள் குறைவாக உள்ளதில் இந்திய அளவில் மதுரையும் உள்ளது.
இந்திய அளவில் ஹஜ் யாத்திரை செல்லும் 1.75 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்க இலக்கு உள்ளது. இதற்கென தனித் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!