சென்னை: ''பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால சிகிச்சை அளிக்க, அப்பல்லோ மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில், பிறவிக் குறைபாடு நோய் பதிவேடு நிறுவுதல் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான விரிவான பரிசோதனையை வலுப்படுத்தல் தொடர்பான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. தேசிய நல்வாழ்வு குழுமம் மற்றும் அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு இடையே, குழந்தைகள் இதய அறுவை சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தில் முதன் முறையாக, பிறவி இதய குறைபாட்டு நோய் பதிவேட்டை உருவாக்குவதோடு, பிறவியில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ஆரம்ப கால இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இதற்காக, சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. மேலும், திருநெல்வேலி, மதுரை, சேலம், கோவை, திருவண்ணாமலை, வேலுார் ஆகிய, ஆறு அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இதய மருத்துவ குழுவினருக்கும், சிறப்பு பயிற்சி கொடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த கருத்தரங்கில் குழந்தை மருத்துவம், இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை உட்பட பல்வேறு துறைகளில் இருந்து, 200 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில், பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் மண்டல வாரியான பராமரிப்பு மையங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்முறையை மேம்படுத்துவது குறித்து, விவாதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (12)
அப்போலோ வுக்கு ஆறுமுகசாமி கமிஷன் நற்சான்று கொடுக்கவில்லையே?
.அப்போலோ வின் நம்பகத்தன்மை குறித்தும் பல கேள்விகள் எழப்பியது இந்த மாதிரியான நேர்மையற்ற நிர்வாகத்தை எப்படி அரசு தேர்ந்தெடுத்துள்ளது..
இவிங்க சரியா கணக்கு விஞ்ஞானமுறையில் காமிப்பாங்க.
மக்களுக்கு ரொம்ப ரொம்ப பயமா இருக்கு .
சென்னை எழும்பூரில் தலைமுறைகளாக அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது.
உங்கள நம்பி எப்டி மருத்துவமனைக்கு வர்றது. அரசு மருத்துவர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லையா?