ADVERTISEMENT
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பா.ஜ.,நகர் செயலாளர் முருகன் கொலை வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட 2 பேருக்கு தமிழக அரசு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்கவும், அதை அப்போதைய இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரிடம் வசூலிக்கவும் தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்ததில் ரத்னகுமாரிடம் தொகையை வசூலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது.
சென்னை தி.நகர் ராஜா முகமது, பரமக்குடி மனோகரன் ஏற்கனவே தாக்கல் செய்த மனு: பரமக்குடியில் பா.ஜ.,நகரச் செயலாளர் முருகன் 2013 மார்ச் 19ல் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். பரமக்குடி டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். அப்போதைய இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் விசாரித்தார்.
எங்களை குற்றவாளிகள் எனக்கூறி கைது செய்தார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தோம். முருகன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. உண்மை குற்றவாளிகளை கண்டறிந்த சி.பி.சி.ஐ.டி., 2014 ல் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையிலிருந்து எங்களை விடுவித்தது.
ரத்னகுமார் முறையாக விசாரிக்கவில்லை. வழக்கில் தவறாக நாங்கள் சேர்க்கப்பட்டோம். சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டோம். எங்களுக்கு இழப்பீடு வழங்கவும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
2022 டிசம்பரில் தனி நீதிபதி பி.புகழேந்தி: ரத்னகுமார் முறையாக விசாரிக்கவில்லை. இதனால் மனுதாரர்கள் தவறாக வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் இருந்துள்ளனர். ராஜா முகமதுவிற்கு ரூ.10 லட்சம், மனோகரனுக்கு ரூ.8 லட்சத்தை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். இத்தொகையை ரத்னகுமாரிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம். இவ்வாறு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ரத்னகுமார் (தற்போது கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம் ரயில்வே இன்ஸ்பெக்டர்) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: முதலில் வேறொரு இன்ஸ்பெக்டர் விசாரித்தார். பின் நான் மேல் விசாரணை செய்தேன். தனி நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் உத்தரவு பிறப்பித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 3 மாதங்களில் தீர்ப்பளிக்க வேண்டும்.
ராமநாதபுரம் கலெக்டராக இருந்த நந்தகுமார்தான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதற்கு பரிந்துரைப்பது மட்டுமே இன்ஸ்பெக்டரின் பணி. என் மீது எவ்வித தவறும் இல்லை. தனி நீதிபதியின் உத்தரவால் எனக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ரத்னகுமார் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: இழப்பீடு தொகையை மனுதாரரிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி 8 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இந்தமாதிரி குற்றமற்றவர்களை சிறை செய்து அவர்களின் எதிர்காலம், குடும்பம், சமூகத்தின்முன் அவமானம், வேலைக்கு எங்கும் சேர இயலாமை எல்லாவற்றையும் கணக்கிட்டால், இழப்பீடு குறைவு இன்ஸ்பெக்டர் பந்தை திருப்பி விடுகிறார். கலெக்டர் சம்பந்தப்பட்டால் அவரும் இழப்பீட்டில் பங்கேற்கவேண்டும்