தமிழக நிகழ்வுகள்
சினிமா பாணியில் கஞ்சா கடத்தல்
சென்னை--சினிமா பாணியில், ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முத்தியால்பேட்டை போலீசார், நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, பின்புறம் எவ்வித பொருட்களும் இல்லை.

வாகன ஓட்டுனர் இருப்பிடத்திற்கு முன்புறமாக உள்ள 'டேஷ்போர்டு' பகுதியில் பார்த்த போது, கட்டுக்கட்டாக கஞ்சா கட்டுகள் சிக்கின. மொத்தம் 25 கட்டுகளில், 50 கிலோ கஞ்சாவை நுாதன முறையில் கடத்தி வந்தது தெரிந்தது.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 23 முதல் 36 வயது வரை உள்ள மூவரை கைது செய்த போலீசார், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 50 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தில், இதுபோன்று சரக்கு வாகனத்தில் நுாதன முறையில் கஞ்சா கடத்துவது போன்று காட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,விற்கு '2 ஆண்டு'
துாத்துக்குடி-பட்டா மாற்றத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு, இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம், பேரூரணி கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் சுப்பையா, 65. இவரிடம், 2010 அக்., 11ல், துாத்துக்குடி, கிப்ட்சன் புரத்தைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன், 67, என்பவர் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.
அதற்கு சுப்பையா, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
துாத்துக்குடி நீதிமன்றத்தில், 12 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், சுப்பையாவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செல்வகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.
ஆசிரியருக்கு வெட்டு 'பாசக்கார' அண்ணன் கைது
விழுப்புரம்-நிலப்பிரச்னை காரணமாக, அரசு பள்ளி வளாகத்தில் புகுந்து ஆசிரியரை அரிவாளால் வெட்டிய அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் மாவட்டம்,கோடங்குடியைச் சேர்ந்தவர் நடராஜன், 42; விழுப்புரம் மாவட்டம்,கோலியனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று மதியம், 1:00 மணியளவில் பள்ளியின் நுழைவாயில் அருகே நின்றிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அவரது அண்ணன் ஸ்டாலின், 52; திடீரென கத்தியால் நடராஜனின் கை மற்றும் முதுகில் வெட்டினார்.
இதைக்கண்ட பிளஸ் 1 மாணவர்கள் மனோஜ், ஆகாஷ், முருகன் ஆகியோர் தடுத்தபோது, கை விரல்களில் லேசான காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த நடராஜன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், மனோஜ் உள்ளிட்ட மூன்று பேரை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஸ்டாலினை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
அதில், சகோதரர்கள் இடையே நிலப்பிரச்னை உள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நடராஜனை, கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. போலீசார் வழக்குப் பதிந்து ஸ்டாலினை கைது செய்தனர்.
பள்ளி வளாகத்தில் ஆசிரியரை, அவரது சகோதரர் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது
உடுமலை-திருப்பூர் மாவட்டம், உடுமலை கொமரலிங்கம், சாமராயபட்டி - பெருமாள் புதுார் பிரிவு அருகே, போலீசார் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மூவரை நிறுத்திய போது, அவர்கள்கையில் வைத்திருந்த பொருளை, இருட்டில் துாக்கி வீசினர். போலீசார் தேடி பார்த்தபோது, நாட்டுத்துப்பாக்கி என தெரிய வந்தது.
விசாரணையில், கோவையில் ஒரு மாதத்திற்கு முன், துப்பாக்கி வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.
சாமராயபட்டியைச் சேர்ந்த துர்க்கைவேல், 39, சிவசக்தி, 20, மாசாணமுத்து, 23 ஆகியோரை போலீசார் கைது செய்து, நாட்டு துப்பாக்கி, தோட்டா பறிமுதல் செய்தனர். துப்பாக்கி விற்பனை செய்த, கோவையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
மனைவி கொலை: கணவருக்கு ஆயுள்
ஸ்ரீவில்லிபுத்தூர்--விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மனைவி மாரியம்மாளை 59, கொலை செய்த கணவர் முத்தையாவிற்கு 65, ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வத்திராயிருப்பு தாலுகா ஆயர்தர்மத்தை சேர்ந்தவர் முத்தையா 65. இவரது மனைவி மாரியம்மாள் 59. இத்தம்பதிக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். முத்தையா மது போதைக்கு அடிமையானதால் குடும்பத்தினர் யாரும் அவருடன் பேசுவதில்லை. இதற்கு மனைவி மாரியம்மாள் தான் காரணம் என கருதினார். இதனால் இருவரிடையயே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
2021 ஜூன் 28 அதிகாலையில் மாரியம்மாளை முத்தையா அரிவாளால் வெட்டி கொலை செய்தார். நத்தம்பட்டி போலீசார் முத்தையாவை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. முத்தையாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அன்னக்கொடி ஆஜரானார்.
வருஷநாடு அருகே 60 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய 2 பேர் கைது
ஆண்டிபட்டி-- -தேனி மாவட்டம், வருஷநாடு அருகே லாரியில் கருவாடு கூடைகளுக்குள் கஞ்சா கடத்தி வந்த இருவரை கடமலைக்குண்டு போலீசார் கைது செய்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வருஷநாடு அருகே சிங்கராஜபுரத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அய்யனார்கோயில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மீன்கள், கருவாடு ஏற்றி வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். கருவாடு பெட்டிகளுக்கு நடுவில் தலா 2 கிலோ பண்டல் வீதம் 30 பண்டல்களில் 60 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மினி லாரியில் இருந்த சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த நல்லமலை 35, புதுக்கோட்டை மாவட்டம் வண்ணிச்சிபட்டியைச் சேர்ந்த டிரைவர் ராஜா 32,வை கைது செய்து விசாரணை செய்ததில் கஞ்சா கடத்தலில் குமணன் தொழுவைச் சேர்ந்த சத்யராஜ் 37, சிங்கராஜபுரம் அருண் 36, ஈஸ்வரன் 35, ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மூவரும் தலைமறைவாகிவிட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்து நல்லமலை, ராஜா இருவரையும் ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி, தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் பொறியாளர் கைது
தூத்துக்குடி -தனியார் நிலத்தின் வழியே செல்லும் மின்வயரை மாற்ற கோரிய விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின்புத்தூரை சேர்ந்தவர் பாரதி சங்கர். இவரது சகோதரி அனுஷ்யாவிற்கு சொந்தமான காலி மனையில் மின்வாரியத்தின் மின் கம்பங்கள் மற்றும் மின்வயர்கள் செல்கிறது.
அந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக பாரதிசங்கர் மின்வயர்களை அங்கிருந்து மாற்றம் செய்ய கோரி விண்ணப்பித்திருந்தார்.
அவரது மனுவை பதிவேற்றம் செய்ய மின்வாரிய இளநிலை பொறியாளர் பொன்ராஜா 57, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி, ஹெக்டர் தர்மராஜிடம் பாரதிசங்கர் புகார் செய்தார்.
நேற்று பாரதிசங்கர் தந்த ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை வாங்கிய பொன்ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.
வயலுக்கு சென்ற பெண் கொலை
திருவாடானை-முன் விரோதத்தில் அக்காளை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த தம்பி மகாலிங்கம் உட்பட 4 பேரை போலீசார் தேடுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஓரியூரை சேர்ந்த நாகலிங்கம் மனைவி கோவிந்தம்மாள் 63. நேற்று முன்தினம் இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் காலை வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் வயலுக்கு சென்று தேடினர். அப்போது மண்வெட்டியால் தலையில் அடிக்கப்பட்டு வயலுக்குள் கொலை செய்யப்பட்டிருந்தார்.
எஸ்.பி., தங்கதுரை நேரில் விசாரித்தார். மோப்ப நாய் கோவிந்தம்மாள் வீட்டருகே உள்ள அவரது தம்பி மகாலிங்கம் வீட்டில் போய் நின்றது. மகாலிங்கம் வீடு பூட்டி இருந்ததால் போலீசார் அவரை தேடுகின்றனர்.
கோவிந்தம்மாள் மகன் கதிரேசனுக்கு மகாலிங்கம் மகள் நிவேதாவை திருமணம் செய்து வைத்தனர். வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் 2019ல் நிவேதா தற்கொலை செய்தார். அந்த வழக்கில் கோவிந்தம்மாள், கதிரேசன் உள்ளிட்ட சிலர் கைது செய்யபட்டனர்.
இந்த விரோதத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற கோவிந்தம்மாளை மகாலிங்கம், மனைவி முனியம்மாள், உறவினர்கள் காளிமுத்து, ராணி ஆகியோர் கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர். கோவிந்தம்மாள் மகள் ராதா புகாரில் 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்திய நிகழ்வுகள்
திரிணமுல் காங்., நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
முர்ஷிதாபாத்-மேற்கு வங்கத்தில், மர்ம நபர்களால் சுடப்பட்ட திரிணமுல் காங்., நிர்வாகி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு முர்ஷிதாபாத் மாவட்டத்தில், இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும் மதராசா ஒன்றின் தலைமை ஆசிரியராக, திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த அல்தப் ஷேக் பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போது, மறைந்திருந்த சில மர்ம நபர்கள் அவரை நோக்கி சுட்டனர்.
இதில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், நேற்று காலை உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு
கண்டனம் தெரிவித்துள்ள திரிணமுல் காங்., - எம்.பி., சாந்தனு சென், ''மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், இதை தடுக்கும் விதமாக எதிர்க்கட்சிகள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம்,'' என்றார்.
சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு 'துாக்கு
ஓங்கோல்-ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அம்பாவரம் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, 2021ல் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானாள்.
அடுத்த சில தினங்களில், அவளின் உடல் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதில் தொடர்புடைய, சிறுமியின் நெருங்கிய உறவினரான சித்தையாவை, 30, கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதன் விசாரணை, பிரகாசம் மாவட்டத்தில் உள்ள 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சித்தையாவுக்கு துாக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மோடி படத்தை அழித்த அதிகாரி 'சஸ்பெண்ட்'
அகர்த்தலா-திரிபுரா உட்பட மூன்று வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதன்படி, அரசியல் தலைவர்களின் படங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டும்.
ஆனால், திரிபுராவின் சப்ரூம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த, பிரதமர் நரேந்திர மோடியின் படத்துக்கு தேர்தல் அதிகாரி கறுப்பு வர்ணத்தை பூசியுள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அதிகாரியை 'சஸ்பெண்ட்' செய்தும், உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!