முதல்வர் பதவிக்காக பலியாடுகள் ஆனோம் சித்து மீது அமைச்சர் சுதாகர் பாய்ச்சல்
சிக்கபல்லாபூர்-'கர்நாடக வரலாற்றில், ஊழல் அமைச்சரான சுதாகருக்கு சீட் கொடுத்ததால், இப்போது பச்சாதாபப்படுகிறேன்' என குற்றம் சாட்டிய சித்தராமையாவுக்கு, சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் சுதாகர் பதிலடி கொடுத்துள்ளார்.
சிக்கபல்லாபூரில், நேற்று அமைச்சர் சுதாகர் கூறியதாவது:
சித்தராமையா துவக்கத்தில் இருந்தே, காங்கிரசில் இருந்தவரா. அவர் முதலில் ஜனதா தளத்தில் இருந்தவர்.
இந்த கட்சி சார்பில் அமைச்சராக, துணை முதல்வரானவர். இவர் காங்கிரசுக்கு வந்தது ஏன். கொள்கைக்காகவா, பதவிக்காகவா.
இவர் மட்டுமே புனிதமானவர். நாங்கள் புனிதமற்றவர்களா. இவர் செய்த பாவ செயலால், நான் காங்கிரசை விட்டு பா.ஜ.,வுக்கு வந்தேன்.
காங்கிரசார் 'மக்கள் குரல்' யாத்திரை பெயரில், எனக்கு எதிராக பிரசாரம் நடத்துகின்றனர்.
ஆனால் நான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு, ஒரே ஒரு பதில் கூற, காங்கிரஸ் தலைவர்களால் முடியவில்லை.
காங்கிரசில் எனக்கு சீட் கிடைக்க, சித்தராமையாவின் பங்களிப்பு எதுவும் இல்லை. எனக்கு 2013ல் சீட் கிடைக்க செய்தது, என் அரசியல் குரு எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் பரமேஸ்வர். சித்தராமையாவிடம், சீட்டுக்காக நான் உதவி கேட்கவில்லை.
நான் எம்.எல்.ஏ.,வான பின், நம்பிக்கையுடன் நடந்து கொண்டேன். சித்தராமையா நல்லது செய்தால், பாராட்டினேன். தவறு செய்தால் அதை நேரடியாக கண்டித்தேன். மக்கள் பிரதிநிதிகள், தங்களின் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சித்தராமையா, தரம் தாழ்ந்து பேசியுள்ளார்.
இவ்வளவு வயதானவரே, இப்படி பேசினால், என்னை போன்ற இளைஞர்கள் என்ன செய்வது. முந்தைய தேர்தலில், வெற்றி பெற்ற பின், முறையின்றி ம.ஜ.த.,வுடன் சேர்ந்து அரசு அமைக்க, எங்களை பலியாடுகள் ஆக்கினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!