பயங்கரவாதத்தை வளர்த்தது யார்? காங்கிரசை வறுத்தெடுத்த பா.ஜ.,
பெங்களூரு-'பயங்கரவாதத்தை துவங்கி வைத்தது யார். வரலாற்று பக்கங்களை புரட்டி பாருங்கள்' என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து, 'டுவிட்டரில்' பா.ஜ., நேற்று கூறியதாவது:
அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும், எதிர்ப்பதாக நீங்கள் - சித்தராமையா, கூறுகிறீர்கள். பயங்கரவாதத்துக்கு இந்திரா, ராஜிவ் பலியானதாக கூறுகிறீர்கள். இத்தகைய பயங்கரவாதத்தை துவக்கியது யார், அதன் நோக்கம் என்ன, வரலாற்று பக்கங்களை புரட்டி பாருங்கள்.
தன் அரசியலுக்காக, பிந்தரன்வாலேவை, இந்திரா பயன்படுத்தினார். தானே வளர்த்த காலிஸ்தான் பயங்கரவாதிகளை ஒடுக்க, அமிர்தசரசின் பொற்கோவிலுக்குள் ராணுவத்தினரை அனுப்ப வேண்டி வந்தது, துரதிருஷ்டவசமானது.
மோசமான அரசியல், எப்படிப்பட்ட சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதை, காங்கிரஸ் மறந்திருக்கலாம்.
தானே வளர்த்த பிந்தரன் வாலேவை, தானே சம்ஹாரம் செய்த இந்திராவின் செயல், சீக்கிய சமுதாயத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதற்காக இந்திரா பலியானார். ஆனால், அதன்பின் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு, சூத்திரதாரி யார்.
நமது மற்றொரு பிரதமரை பலி வாங்கியது எல்.டி.டி.இ., அமைப்பு. ஆனால் இந்த அமைப்பு உருவாக உதவியது யார் என்பதை ஆராய்ந்தால், அம்பு மீண்டும் காங்கிரசை நோக்கி திரும்பும் என்பதை, அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அமைப்புகளை வளர்ப்பதன் மூலம், அண்டைய நாடுகளை கட்டுப்படுத்துவது, இந்திராவின் திட்டமாக இருந்தது.
எல்.டி.டி.இ., செயல்பாட்டால், இலங்கையை கட்டுப்படுத்துவது எளிது என்பது, அவரது எண்ணம். எனவே, இந்த அமைப்பினரை இந்தியாவுக்குள் வரவழைத்து, ஆயுதங்கள் சப்ளை செய்து, பயிற்சி அளித்தார். இலங்கையுடன், எல்.டி.டி.இ., யுத்தம் செய்த போது, அவர்களுக்கு தேவையான ஆயுதம் மட்டுமின்றி, மருந்துகளும் இந்தியாவில் இருந்து தான் சென்றன.
இதுபோன்ற தொடர்பை ராஜிவ் துண்டித்ததால், எல்.டி.டி.இ., அமைப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி, இந்திய உளவுத்துறையுடன், இந்திய ராணுவத்தையே யுத்தத்தில் இறக்கினார் ராஜிவ்.
விஷப்பாம்புடன் பகடை ஆட்டம் ஆடியது போன்று,பயங்கரவாதத்துடன் கை கோர்த்த வரலாறு, காங்கிரசுக்கு உள்ளது. இவ்விஷயமாக ராஜிவ் கொலையானது துரதிர்ஷ்டவசமானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!