எழுதவும், படிக்கவும் தெரியாத 15 வயதுக்கு மேற்பட்டோர் யார்? இன்றைய கிராமசபை கூட்டத்தில் முடிவு
கோவை: கிராமசபை கூட்டத்தில், 15 வயதுக்கு மேல், எழுத படிக்க தெரியாதவர்களின் விபரங்களை திரட்டி, அவர்களை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் சேர்க்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அடிப்படை எழுத்தறிவு பெறாத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களை, எழுத, படிக்க வைக்க கொண்டு வரப்பட்டதே, புதிய பாரத எழுத்தறிவு திட்டம். மத்திய, மாநில அரசுகளின், நிதி பங்கீட்டில், இத்திட்டம் கடந்தாண்டே கொண்டு வரப்பட்டது.
அடுத்த ஐந்தாண்டுகளில், அதாவது 2027ல், எழுத, படிக்க தெரியாதவர்கள் இல்லாத நாடாக மாற்ற, இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கொண்டு, ஒன்றியந்தோறும் மையங்கள் அமைக்கப்பட்டு, மாலை நேரங்களில், எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு வகுப்பு கையாளப்படுகிறது.
இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், எழுத, படிக்க தெரியாதவர்களை அடையாளம் காணும் வகையிலும், கிராம சபை கூட்டத்தில், இது குறித்து கலந்தாலோசிக்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'கிராமசபை கூட்டத்தில், கல்விக்குழு சார்பாக, அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்பது வழக்கம். நாளை (இன்று) நடக்கவுள்ள கிராமசபை கூட்டத்தில், எழுத, படிக்க தெரியாதோர் பட்டியல் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கு அவர்களின் குடியிருப்புக்கு அருகே மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 15 வயதுக்கு மேல் எழுத, படிக்க தெரியாதவர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் இணைக்கப்படவுள்ளனர்' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!