பதவி உயர்வு வழங்கியதில் விதிமீறல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோவை : பாரதியார் பல்கலையில் சமீபத்தில் வழங்கப்பட்ட பதவி உயர்வு செயல்பாடுகளில், விதிமீறல்கள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 2022 டிச., முதல் வாரத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், பல்கலையில், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் பிரிவுகளின் கீழ், 55 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதில், 'கல்வியியல் தொழில்நுட்ப' பிரிவில், பணி நியமனம் செய்யப்பட்ட ஒருவருக்கு, கல்வியியல் பிரிவில் பதவி உயர்வுக்கான பணி மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது. இவ்விதிமுறை மீறல் குறித்து, பல்கலைக்கு புகார் அளிக்கப்பட்டும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இது குறித்து, பல்கலை ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், '' சம்பந்தப்பட்ட நபர் எம்.எட்., படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
கல்வியியல் பிரிவில் ஆசிரியராக பணிபுரிய தகுதியான மதிப்பெண்களை அவர் பெறவில்லை.
பணிமேம்பாடு பதவி உயர்வு தேர்வு குழுவும், கல்வியியல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் தான், பேராசிரியராக அவரை அங்கீகரிக்க முடிவு எடுத்தது.
ஆனால், கல்வியியல் பிரிவில் பேராசிரியராக தற்போது பதவி உயர்வு வழங்கியது விதிமீறல். தவறான ஆணை வெளியிட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!