பராமரிக்கப்படாத நுாலக கட்டடங்கள்! அரசுக்கு மக்கள் கோரிக்கை
உடுமலை: கிராமங்களில் பயன்பாடு இல்லாமல், பூட்டிக்கிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலக கட்டடங்களை, புதுப்பித்து, மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ் இந்நுாலகங்களை இணைத்து பராமரிக்க வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நுாலக கட்டடங்கள் கட்டப்பட்டு, ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் கண்காணிப்பில், பராமரிக்கப்பட்டது.
அங்கு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் நுாலக கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு, மாதம், 750 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. பின்னர், இந்நுாலக பராமரிப்பு மற்றும் புத்தகங்கள் ஒதுக்கீடு குறித்து, அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கண்டுகொள்ளப்படவில்லை.
சம்பளம் வழங்குவதிலும், இழுபறி ஏற்பட்டது. படிப்படியாக நுாலகங்கள் மூடப்பட்டு, தற்போது, இத்திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட அனைத்து நுாலகங்களும் செயல்பாடு இல்லாமல் முடங்கியுள்ளன.
மூன்று ஒன்றியங்களிலும், 25க்கும் மேற்பட்ட கிராமங்களில், நுாலக கட்டடங்கள் பராமரிப்பின்றி, எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.
கட்டட வளாகங்கள் 'குடி'மகன்களின் திறந்தவெளி பாராக மாற்றப்பட்டு, இதர சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நுாலக கட்டடங்களை, புதுப்பித்து, திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ் இணைத்து, முறையாக பராமரிக்க வேண்டும்.
புதிய புத்தகங்களை ஒதுக்கீடு செய்தால், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க., ஆட்சிக்காலத்தில், துவங்கிய இத்திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு மீண்டும் மனு அனுப்பியுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!