நெற்பயிரை தாக்கும் பூச்சி தாக்குதல்; கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அட்வைஸ்
உடுமலை : மடத்துக்குளம் வட்டாரத்தில், 3,056 ெஹக்டேரில், நடப்பு சீசனில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி அறிக்கை: நெல் சாகுபடியில், நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, பரிந்துரைகளை விவசாயிகள் பின்பற்றலாம்.
தண்டு துளைப்பான்
நெற்பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதல் இருந்தால், இலையின் நுனியில், முட்டை குவியலாக காணப்படும். நடுக்குருத்து காய்ந்து விடும்.
ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா ஜப்பாணிக்கத்தை ஏக்கருக்கு, 5 அட்டைகள் வீதம் வைக்க வேண்டும். அதிகப்படியான நீர் கட்டுதலை குறைக்க வேண்டும்.
தண்டு துளைப்பான் எதிர்ப்பு ரகமான, கோ 51; துாயமல்லி ரக நெல் விதைகளை பயன்படுத்தலாம்.
பறவை குத்துக்கோல் பயன்படுத்தி, பறவைகள், இயற்கை இரை விழுங்கிகளை ஈர்த்தும் கட்டுப்படுத்தலாம். குவினால்பாஸ், லிட்டருக்கு, 2 மில்லி வீதம் தெளித்து, கட்டுப்படுத்தலாம்.
நெற்பயிரில் தோன்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே நெல், நாற்றங்கால் இடும் முன், டிரைக்கோடெர்மாவிரிடி அல்லது சூடோமோனஸ் புளுரோசன்ஸ் வாயிலாக விதை நேர்த்தி செய்வது அவசியமாகும்.
குலை நோய்
பயிரின் அனைத்துப்பகுதியிலும், பூசண நோய்த்தாக்குதல் மற்றும் கண் போன்ற புள்ளிகள் உருவாகும். பின்னர் இலைகள் பழுப்பு அடைந்து, கீழ் இருந்து மேலாக எரிந்தது போல பயிர் முழுவதும் உருவாகும்.
கணுக்கள், உடைந்து வெண்கதிர் அறிகுறி தோன்றும். தற்போதுள்ள மேகமூட்டம், பனிதுாறல் குலை நோய்க்கு சாதகமான சூழலாகும்.
இதைக்கட்டுப்படுத்த, அதிகப்படியான நீர் பாய்ச்சலை குறைக்க வேண்டும்; வரப்புகளில், அதிகப்படியான களைகளை அப்புறப்படுத்த வேண்டும். கோ 51 ரக நெல் வகைகள் உட்பட அதிக குலை நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்களை பயன்படுத்தலாம்.
இலையுறை அழுகல் நோய்
இந்நோய், கதிரை சுற்றி, கண்ணாடி உறையில், கருஞ்சிவப்பு நிறப்புள்ளி தோன்றும். இதனால், கதிர்கள் வெளிவராது; வெளிவந்த கதிர்கள் நிறம் மாறி விடும்.
இதை கட்டுப்படுத்த சூடோமோனஸ் புளுரோசன்ஸ் வாயிலாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். இத்தகைய பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் பின்பற்றி அதிக மகசூல் பெறலாம்.
சூடோமோனஸ் புளுரோசன்ஸ் மற்றும் டிரைக்கோடெர்மாவிரிடி மடத்துக்குளம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், மானிய விலையில் கிடைக்கிறது. விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!