புதிய பாரத எழுத்தறிவு திட்டம் விழிப்புணர்வு பேரணி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, வால்பாறையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தமிழக அரசின் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனரின் உத்தரவுப்படி, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் வகையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணி நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, பொள்ளாச்சி தெற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், விழிப்புணர்வு பேரணி, ஆர்.கே., நகர் நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
பேரணியை, வட்டார கல்வி அலுவலர்கள் பூம்பாவை, க்ளோரி ஸ்டெல்லா ஆகியோர் துவக்கி வைத்தனர். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், முதியவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. ஆசிரியர் பயிற்றுனர்கள் துண்டு பிரசுரங்களை வினியோகித்து பொதுமக்களிடம் திட்டம் குறித்து விளக்கினர்.
ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறியதாவது:
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 15வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதவர்களை அடையாளம் கண்டறிய வேண்டும். அவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்க வேண்டும்.
இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து விளக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 15வயதுக்கு மேற்பட்டோரில் எழுத படிக்க தெரியாத, 1,555 பேர் உள்ளனர். அவர்களுக்கு, 93 பள்ளிகளிலும், ஒவ்வொரு மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இங்கு, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மையத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வால்பாறை
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணியை திட்ட மேற்பார்வையாளர் ராஜாராம் முன்னிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஆசிரியர் பயிற்றுனர்கள், பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!