தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு; முதிய பழங்குடியினர் கவுரவிப்பு
ஊட்டி : ஊட்டியில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, ஒவ்வொரு தேர்தலில் ஆர்வமாக ஓட்டளிக்கும் நீலகிரியில் வாழும் முதிய பழங்குடியினர் கவுரவிக்கப்பட்டனர்.
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், 13வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி 'ஓட்டளிப்பதே சிறந்தது, நிச்சயம் ஓட்டளிப்பேன்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு, உறுதி மொழி நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசுகையில்,''ஒவ்வொரு ஆண்டும் ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நீலகிரியில், 5.80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மூன்று தொகுதிகளில், '19 வயதுக்கு உட்பட்ட, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள்,' என, 20 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலில் பழங்குடியினர் முதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்கின்றனர். இளைஞர்கள் அவர்களை பார்த்து ஆர்வமுடன் ஓட்டளிக்க முன்வர வேண்டும். ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.
பின், மாவட்டத்தில் வாழும் மூத்த பழங்குடியின வாக்காளர்கள் பொம்மராயன், லிங்கி, சென்சார் குட்டன் உட்பட 10க்கு மேற்பட்ட பழங்குடியினருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். முன்னதாக, 13 வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நகரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, எஸ்.பி., பிரபாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கூடலுார் நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய வாக்காளர் தின ஊர்வலத்தை, ஆர்.டி.ஓ., முகமது குதுரத்துல்லா துவக்கி வைத்தார்.
அதில், 'தேர்தலில் ஓட்டளிப்பதின் முக்கியத்துவம்,' குறித்து கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலத்தில் தாசில்தார் சித்துராஜ், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!