தி.மு.க., கூட்டணிக்கு கமல் ஆதரவு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக்குழு, செயற்குழு கூட்டம், சென்னையில் இரண்டு நாட்களாக நடந்தது.
கூட்டம் நிறைவடைந்த பின், கமல் அளித்த பேட்டி:
ஈரோடு கிழக்கு சட்டபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., - காங்., கூட்டணி வேட்பாளர் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவது என முடிவு எடுத்துள்ளோம்.
அவரது வெற்றிக்காக நானும், என் கட்சியினரும் வேண்டிய உதவிகளை செய்வோம். இளங்கோவனை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும்.
முன்னோட்டம்
இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளராக, நிர்வாக குழு உறுப்பினர் அருணாச்சலத்தை நியமிக்கிறேன்.
இந்த முடிவு அவசர நிலைக்கானது. தமிழகத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும்; எதிர்வாத சக்திகளுக்கு கை கூடிவிடக்கூடாது என்பதற்கானது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. ஆதரவு நிலைப்பாடு என்பதில் தயக்கம் இல்லை.
இதை லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதே மாதிரி தான் ஓடுவோம் என்று சொல்ல முடியாது. காலமும், பேச்சும், அரசியலும் மாறிக்கொண்டே இருக்கும். இது, அனைவருக்கும் தெரியும்.
இந்த நேரத்தில் எதிர்கட்சியாக இருந்தாலும், அனைவருமே சகோதரர்கள் தான். தேசத்திற்கு தீங்கு வரும்போது, அந்த கோட்டையும் அழிக்க வேண்டி வரும்.
போர் மூளும்போது, கட்சி எல்லாம் பார்க்கக்கூடாது.
பிடிக்காத கட்சியாக இருந்தாலும், தேசத்திற்காக ஒரே மேடையில் அமர வேண்டும். லோக்சபாவுக்கு கமல் செல்வதற்கான பயணமாகவும் இது அமையலாம். மக்களுக்கு பணி செய்வதே, என் ஆசை.
இவ்வாறு கமல் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்., வேட்பாளர் இளங்கோவனுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆதரவு தெரிவித்த நிலையில், மதுரையில் அவரது கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்று விதமான 'போஸ்டர்' ஒட்டியுள்ளனர்.ம.நீ.ம., கட்சியின், 30வது வட்ட செயலர் சீனிவாசன், நற்பணி இயக்க முன்னாள் மாவட்ட செயலர் ஆசைத்தம்பி, மாநகர செயலர் செந்தில், தகவல் தொழில்நுட்ப அணி தினேஷ்பாபு ஆகியோர், 'ஆதரவு ஈவோரை விலக்கு. இன்றைய இலக்கு; ஈரோடு கிழக்கு' என, குறிப்பிட்டுள்ளனர்.
யாருக்கும் ஆதரவு தராமல் தனித்து போட்டியிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை.இந்த போஸ்டர்கள் குறித்து மண்டல மகளிரணி செயலர் பத்மாவதி, ஊடகப்பிரிவு மண்டல அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது: சமீபத்தில் சென்னையில் நடந்த கூட்டத்தில், தனியாக யாரும் பேட்டி கொடுக்கக் கூடாது என, கமல் தெரிவித்திருந்தார். தலைவர் சொல்வதை தான் கேட்போம். மாறுபட்டு செயல்பட முடியாது.எல்லா விஷயமும் எல்லோரிடமும் சொல்லிவிட்டு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு சிலர் அப்படித்தான் இருப்பர். போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!