எஸ்.சி.ஓ., மாநாட்டில் பங்கேற்க பாக்.,கை அழைத்தது இந்தியா
புதுடில்லி, கோவாவில் மே மாதம் நடக்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது.
எஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில், தற்போது ஈரான் புதிய உறுப்பினராக இணைந்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. இந்நிலையில், இந்த அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, கோவாவில் மே 4 - 5ம் தேதிகளில் நடக்கிறது.
இதில் பங்கேற்க, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரிக்கு, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சார்பில் அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதரகம் வாயிலாக இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தியா வந்து 11 ஆண்டு கள் ஆகின்றன. கடந்த 2012ல் ஹினா ரப்பானிகர் பாக்., வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது புதுடில்லி வந்தார். அதன் பின் பாக்., அமைச்சர்கள் ஒருவரும் இந்தியா வரவில்லை.
மஹாராஷ்டிராவின் மும்பையில் சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நடத்திய திரைப்பட விழாவில் கூட, பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.
பாகிஸ்தான் பாடம் கற்று விட்டதாகவும், இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்பு வதாகவும், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் தெரிவித்தது, இருநாட்டு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!