பிரதமர் மோடியுடன் எகிப்து அதிபர் சந்திப்பு
புதுடில்லி, பிரதமர் நரேந்திர மோடி, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி சந்திப்பின் போது, இந்தியா - எகிப்து இடையிலான உறவை மேலும் வலுவாக்கவும், ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பில் உறவை விரிவாக்கவும் முடிவு செய்யப்பட்டது.
சிவப்பு கம்பள வரவேற்பு
குடியரசு தின விழாவில் விருந்தினராக பங்கேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று, வடகிழக்கு ஆப்ரிக்க நாடான எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி, மூன்று நாள் பயணமாக புதுடில்லி வந்துள்ளார்.
இதற்கு முன்னதாக, எகிப்து அதிபருக்கு புதுடில்லியில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின் பிரதமர் மோடியும், எகிப்து அதிபர் எல் சிசியும் சந்தித்து பேசினர்.
அப்போது கலாசாரம், தகவல் தொழில்நுட்பம், 'சைபர்' பாதுகாப்பு, இளைஞர் விவகாரம், ஒலிபரப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து இருநாடுகள் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பாதுகாப்பு
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை:
இருதரப்பு வர்த்தக உறவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இந்தியா- - எகிப்து இடையிலான சீரான உறவின் கீழ், அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அறிவியல் துறைகளில் விரிவான ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்துஉள்ளோம்.
இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் உளவுத் தகவல் பரிமாற்றத்தை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எகிப்து அதிபர் எல் சிசி பேசுகையில், ''பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
''பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற மோடியின் கருத்தை நான் வழிமொழிகிறேன். பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாத விவகாரங்களை கையாள்வதில் எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான சிந்தனை உள்ளது,'' என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!