பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஓராண்டுக்கும் மேலாக சம்பள பாக்கி
ராஞ்சி, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான கனரக பொறியியல் கழகத்தில் பணியாற்றும், 1,300 ஊழியர்களுக்கு, ஓராண்டுக்கும் மேலாக மாத சம்பளம் வழங்கப்படாததால், அவர்கள் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான, ஹெச்.இ.சி., எனப்படும் கனரக பொறியியல் கழகம், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வருகிறது.
கடந்த 1958ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், ஸ்டீல், சுரங்கம், ரயில்வே, மின்சாரம், ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி உட்பட பல்வேறு துறைகளுக்கு தேவையான முதன்மை உபகரணங்களை தயாரித்து வினியோகித்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு தேவையான ஏவு தளத்தை, இந்நிறுவனம் தயாரித்து தந்தது.
இங்கு, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உட்பட, பல முன்னணி கல்வி நிலையங்களில் பயின்ற பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட மொத்தம் 1,300 பேர் பணியில் உள்ளனர். இந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதை அடுத்து, ஊழியர்களுக்கு கடந்த ஓராண்டும், அதிகாரிகளுக்கு 15 மாதங்களாகவும் சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனால், ஊழியர்கள் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றனர். பலர் பிள்ளைகளின் கல்வி செலவு, குடும்பத்தினரின் மருத்துவ செலவுகளுக்கு பணம் இன்றி, தற்காலிகமாக காய்கறி, பழங்கள், டீ போன்றவற்றை விற்பனை செய்து நிலைமையை சமாளித்து வருகின்றனர்.
மத்திய அரசிடம் போராடி ஊதிய பாக்கியை பெறுவதற்காக, ஊழியர்கள், அதிகாரிகள் ஒன்றிணைந்து குழு ஒன்றை அமைத்துள்ளனர்.
இந்த குழு வாயிலாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோருக்கு தங்கள் பிரச்னையை விபரமாக விளக்கி, 'இ - மெயில்' அனுப்பி உள்ளனர்.
சம்பள பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படவில்லை எனில், அடுத்த மாதம் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!