பி.பி.சி., ஆவணப்பட விவகாரம் காங்., மூத்த தலைவர் மகன் விலகல்
திருவனந்தபுரம்,குஜராத் வன்முறை தொடர்பான பி.பி.சி., ஆவணப்பட விவகாரத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனியின் மகன் அனில், காங்., கட்சியிலிருந்தும், கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தியுள்ளனர்.
இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கேரள முன்னாள் முதல்வரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான ஏ.கே.அந்தோனியின் மகன் அனில், இந்த ஆவணப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அவருக்கு எதிராக காங்கிரசைச் சேர்ந்த பலர் விமர்சனத்தை முன்வைத்தனர். இதையடுத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அனில் நேற்று அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
பா.ஜ.,வுடன் நமக்கு கருத்து, கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், நம் நாட்டின் பிரதமருக்கு எதிரான ஆவணப்படத்தை ஆதரிப்பது தவறான முன்னுதாரணம் என்று தான் நான் கூறினேன்.
இதில் நான் பா.ஜ.,வுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை.
என் கருத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், சமூக வலைதளப் பதிவை திரும்பப் பெறக் கோரி பலர் என்னிடம் பேசினர்.
பலர் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினர். தற்போதைய அரசியல் மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது வருத்தம் அளிக்கிறது.
இதனால், காங்., கட்சியிலிருந்தும், கட்சியின் கேரள மின்னணு ஊடகப் பிரிவு பொறுப்பு மற்றும் தேசிய அளவிலான ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த ஆவணப்படம் குறித்து கேரள கவர்னர் ஆரீப் முகமது கான் கூறியுள்ளதாவது:நம் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள ஆவணப்படத்தை நம் மக்கள் நம்புவது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. ஆனால், நம் நாட்டின் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை இவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.'ஜி - ௨௦' எனப்படும் உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில், இந்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பி.பி.சி., ஆவணப்படத்தை நேற்று மாலை வெளியிடப் போவதாக, புதுடில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையின் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற மாணவர் இயக்கத்தினர் அறிவித்திருந்தனர்.இதையடுத்து பல்கலை வளாகத்தில் கலவரம் தடுப்புப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவணப்படத்தை வெளியிடுவதற்கு பல்கலை நிர்வாகம் தடைவிதித்து உள்ளது. மேலும், நேற்று வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!