திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ளது துணை மின் நிலையம்.
கடந்த, 1994ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த துணை மின் நிலையத்தில், உதவி பொறியாளர், போர்மேன், லைன் மேன், ஒயர்மேன், மின் கணக்கிட்டு பணியாளர் என 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
கடும் அச்சம்
இந்த மின் நிலையத்தில் இருந்து, பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், களாம்பாக்கம், சிவபுரம், ஓ.எம்.மங்கலம், கப்பாங்கோட்டூர், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி.
கொண்டஞ்சேரி, மப்பேடு, எறையாமங்கலம், கீழச்சேரி, கொட்டையூர், பாகசாலை, சின்னமண்டலி, லட்சுமிவிலாசபுரம் மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கட்டடம், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் இதுவரை எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் கட்டடங்கள் முழுதும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மேற்புறம் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் இங்குள்ள அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த வரும் கிராம மக்கள் கடும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
மேலும் புதிய மின் இணைப்பு பெறுதல், மற்றும் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்க வரும் பொது மக்களுக்கு கடும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
அலுவலகம் புதர் மண்டிக் காணப்படுவதால் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் மற்றும் மின்சார ஊழியர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
மேலும் மழைக்காலங்களில் கட்டடங்களில் மழை நீர் தேங்கி ஒழுகுவதால் அலுவலக பதிவேடுகள் நனைந்து வீணாகி வருகின்றன.
இதனால் ஊழியர்கள் தினந்தோறும் அச்சத்துடன் பணிக்கு வந்து செல்கின்றனர்.
எதிர்பார்ப்பு
எனவே, பேரம்பாக்கம் துணை மின் நிலையத்தில் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு கோட்ட மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள பேரம்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
விரைவில் அரசுக்கு அனுப்பப்பட்டு, உத்தரவுக்கு பின், துணை மின் நிலைய சீரமைப்பு பணிகள் துவங்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!