வாலாஜாபாத் - ஒரகடம் சாலை விரிவுபடுத்தும் பணி...சுணக்கம்!:அலுவலர் இல்லாமல் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாதில் இருந்து, ஒரகடம் வரையில், 15 கி.மீ., நீளம் நான்குவழி சாலை உள்ளது. ஒரகடம் பகுதியில், கூடுதல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், வாகன போக்குவரத்து எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
விரிவுபடுத்தும் பணி
ஆகையால், வாலாஜாபாத் துவங்கி, ஒரகடம் வரை, நான்குவழி சாலையை, ஆறுவழி சாலையாக விரிவுபடுத்துவதற்கு நெடுஞ்சாலை துறை முன் வந்தது.
இந்த சாலை விரிவாக்கப் பணிகள், இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என, தமிழ்நாடு சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் முடிவு செய்து இருந்தது.
அபாயகரமான வளைவு
ஒரகடம் முதல், குண்ணவாக்கம் கிராமம் வரையில், 6 கி.மீ., துாரம் மற்றும் தேவரியம்பாக்கம் கிராமம் முதல், வாலாஜாபாத் வரையில், 6 கி.மீ., துாரம், நான்குவழி சாலை ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இதில், தேவரியம்பாக்கம் முதல், சின்ன மதுரப்பாக்கம் கூட்டு சாலை வரை, 3 கி.மீ., துாரம் நான்குவழி சாலை, ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தப்படாமல், பணிகளை கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
குறிப்பாக, தேவரியம்பாக்கம் மற்றும் தழையம்பட்டு உள்ளிட்ட அபாயகரமான வளைவுகளில், சாலையை நேர்படுத்துவதற்கு, தனியாருக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்த வேண்டி இருந்தது.
இந்த நிலம் கையகப்படுத்தும் பணி தாமதத்தால், தேவரியம்பாக்கம் மற்றும் தழையம்பட்டு ஆகிய கிராமங்களில், இரண்டு ஆண்டுகளாக சாலை விரிவுபடுத்தும் பணி கிடப்பில் உள்ளது.
கோரிக்கை
இதனால், தேவரியம்பாக்கம் மற்றும் தழையம்பட்டு ஆகிய பகுதிகளில், அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்கின்றன.
மேலும், வட கிழக்கு பருவ மழையால், தழையம்பட்டு அபாயகரமான வளைவில், சாலை குண்டும், குழியுமாக மாறியதால், கூடுதல் வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
எனவே, அபாயகரமானசாலை வளைவுகளில், விரிவுபடுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பல தரப்பு வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்காமல் இருந்ததால், சாலை விரிவாக்க பணிகளில், ஆங்காங்கே சுணக்கம் ஏற்பட்டு இருந்தது.
விபத்து இன்றி பயணம்
சில மாதங்களுக்கு முன், பல்வேறு மாவட்டங்களுக்கு, நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேவரியம்பாக்கம் மற்றும் தழையம்பட்டு பகுதியில், தனியாருக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தும் பணி, சமீபத்தில் நிறைவு பெற்று உள்ளது.
விரைவில், தரைப்பாலங்கள் இணைப்பு செய்யும் பணியை துவக்க உள்ளோம். இந்த பணிகள், மார்ச் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்து விடுவோம்.
இனி, வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில், விபத்து இன்றி பயணம் செய்ய வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!