மாநகராட்சி அலுவலகம் முற்றுகை கண்ணப்பர் திடல் மக்கள் ஆவேசம்
சென்னை, சொந்த வீடு கனவில், 20 ஆண்டுகளாக ஏமாற்றத்துடன் வாழ்ந்து வரும் கண்ணப்பர் திடல் மக்கள், நேற்று மாநகராட்சி அலுவலகத்தை ஆவேசத்துடன் முற்றுகையிட்டனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முதல் செடாம்ஸ் சாலை வரை உள்ள பகுதிகளில், 200க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் வாழ்ந்து வந்தனர்.
கடந்த 2002ல், நேரு விளையாட்டு அரங்கள் விரிவாக்கத்தின்போது, அவர்கள் அங்கிருந்து மாற்றப்பட்டு, சூளை, கண்ணப்பர் திடல் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, மூன்று மாதத்தில் வீடு ஒதுக்கப்படும் என, மாநகராட்சி உறுதி அளித்திருந்தது.
ஆனாலும், 20 ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. தற்போது, கண்ணப்பர் திடலில் வசிக்கும் 80 குடும்பங்களில், 70 ஆண்கள்; 120 பெண்கள்; 50 குழந்தைகள்; 45 இளம்விதவைகள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் தங்கியிருக்கும் கட்டடமும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. தினமும் உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்பின்றி ஒவ்வொரு தினமும் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
பல முறை தங்களது நிலை குறித்து, ஆட்சியாளர்களிடம் அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தும் அவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்பதே உண்மை.
இந்த நிலையில், மாற்று வீடுகள் வழங்கக்கோரி, கண்ணப்பர் திடல் மக்கள் மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
அப்போது, மேயர் இல்லாததால், ரிப்பன் மாளிகை எதிரே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தினர்.
சிலர் மட்டும் மாநகராட்சி கமிஷனரிடம், புதிதாக வீடு ஒதுக்கும்படி மனு அளித்தனர். தொடர்ந்து, ரிப்பன் மாளிகை வளாகத்திலேயே இருந்த அவர்களை போலீசார் பேச்சு நடத்தியதால் கலைந்து சென்றனர்.
விரைவில், கண்ணப்பர் திடல் மக்களுக்கு வீடுகள் கட்டி மறுகுடியமர்வு செய்யப்படுவர் என, சமீபத்தில் அமைச்சர் உதயநிதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!