100 அடி சாலையில் வடிகால் சீரமைப்பு
அரும்பாக்கம், நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, அரும்பாக்கம் அருகில் அரைகுறையாக விடப்பட்ட மழைநீர் வடிகால்களை மூடி, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
சென்னையில் பருவமழையின் போது அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்தன.
அந்த வகையில், சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு உட்பட்ட சாலைகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்தன.
பருவ மழையின் போது விறுவிறுப்பாக நடந்த பணிகள், அதன் பின் பல இடங்களில் அரைகுறையாக விடப்பட்டன.
குறிப்பாக, அண்ணா நகர் மண்டலம் 106வது வார்டில், அரும்பாக்கம் அருகில் 100 அடி சாலையில், சூளைமேடு பெரியார் பாதை உள்ளது.
கோயம்பேடில் இருந்து வடபழநியை நோக்கிச் செல்லும் இந்த சாலையோரத்தில், கடந்த பருவ மழையின் போது சாலை முழுதும் தண்ணீர் தேங்கியது.
இதற்கு தீர்வு காணும் வகையில், நெடுஞ்சாலைத் துறையால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் துவங்கியது.
துறையின் அமைச்சர் உள்ளிட்டோர் இந்த இடத்தை ஆய்வு செய்தனர். தற்போது இந்த பகுதியில் பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. இதனால், அங்கு வடிகாலில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் நிலவியது.
இதுகுறித்து நம் நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து, திறந்தவெளியில் இருந்த வடிகால்களை மூடி, அங்கு தற்காலிக சீரமைப்புப் பணிகளை, நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு உள்ளனர்.
இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!