திருவொற்றியூர், கட்டுமானப் பணிகள் முடிவடையாத பகிங்ஹாம் கால்வாய் மேம்பாலத்தில், இரண்டாவது முறையாக சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை, மணலி - திருவொற்றியூரை இணைக்கும் வகையில், குப்பைமேடு, பகிங்ஹாம் கால்வாய் அருகே, இரு வழித்தடம் கொண்ட மேம்பாலக் கட்டுமானப் பணிகள், 2017ல், 42 கோடி ரூபாய் செலவில் துவங்கி நடக்கிறது.
மேம்பால பணி காரணமாக, திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லக்கூடிய மக்கள், குப்பை மேடு, வெற்றி விநாயகர் நகர், ராஜாஜி நகர், கார்கில் நகர், மணலி விரைவு சாலை சந்திப்பு, சாத்தாங்காடு சந்திப்பு.
மேலும், எம்.எப்.எல்., சந்திப்பு, பொன்னேரி நெடுஞ்சாலை, சி.பி.சி.எல்., சந்திப்பு, காமராஜர் சாலை வழியாக, 5 - 7 கி.மீ., துாரத்திற்கு சுற்றிசெல்ல வேண்டி இருந்ததால், பணம், எரிபொருள், நேரவிரயம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், மேம்பாலப் பணிகள், 70 சதவீதம் அளவிற்கு முடிந்த நிலையில், சாய்தள பாதைகள் பணிகள் மட்டும் பாக்கி உள்ளன. அதற்கான குவாரி மண் கிடைக்காததால், சில மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
'ஷூட்டிங்'
தற்போது, 'மே மாதத்தில், மேம்பாலம் திறக்க ஏதுவாக பணிகள் முடிக்கப்படும்' என, மேம்பால கட்டுமான அதிகாரி ஒருவர் கூறினர்.
இதற்கிடையில், மக்கள் கோரிக்கையை ஏற்று, நிறைவடையாத பாலத்தின் இருபுறமும், மணல் மேடுகள் அமைக்கப்பட்டு, பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ உள்ளிட்ட சிறிய வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
ஆபத்தான பயணம் என்றாலும், பல ஆண்டுகளாய் காத்திருக்கும் மக்களுக்கு இது தற்காலிக தீர்வு என்பதால் பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், அவ்வப்போது, சினிமா படப்பிடிப்பிற்காக, மேம்பாலம் ஆக்கிரமிக்கப்படுவதால், பெரும் சிக்கல் எழுகிறது.
கடந்த இரு மாதங்களுக்கு முன் கூட, சினிமா படப்பிடிப்பு காரணமாக, மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் மீண்டும் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக, 'பேனர்'கள், தெருவிளக்குகள், ராட்சத மின் விளக்குகள் கட்டும் பணிகள் நடக்கின்றன.
மணலி - திருவொற்றியூர் மக்களின் பல ஆண்டு கால கோரிக்கை, ஆறு ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்கும் கட்டுமானப் பணிக்கு இடையே, சினிமா படப்பிடிப்பு அவசியமா என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, சினிமா படப்பிடிப்பிற்கு ஆர்வம் காட்டும் அளவிற்கு, மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!