நடைபாதையில் குடி மையம்: முகப்பேர் பகுதியில் அட்டூழியம்
முகப்பேர், சென்னை முகப்பேர், வட்டவடிவ நகரில், 3,000க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றர்.
இந்த நிலையில், அங்குள்ள, அம்பத்துார் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும், தொழிற்பேட்டை சாலையில், மாநகராட்சியின், 20 அடி அகல நடைபாதையை ஆக்கிரமித்து, 'டாஸ்மாக்' பார் கட்டப்பட்டுள்ளது.
இங்கு, மது குடிக்க வரும் 'குடி'மகன்கள், தங்களது வாகனத்தை சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். அதனால், போக்குவரத்து நிறைந்த சாலையில், அந்த இடத்தை கடந்து செல்லும், பள்ளி மாணவர்கள் உட்பட பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். மேலும், அங்குள்ள கோவில், மசூதிக்கு அருகில், அமைந்துள்ள, அந்த டாஸ்மாக் கடையால், பக்தர்களும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பிட்ட நேரத்தில், டாஸ்மாக் கடை மூடியிருந்தாலும், அந்த பாரில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் இருந்து, 'குடி'மகன்கள் அங்கு படை எடுக்கின்றனர். அதனால், பொது சுகாதார பாதிப்பு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.
கடந்த சில மாதத்திற்கு முன் கூட, மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ரவுடிகளை பிடிக்க சென்ற, ஜெ.ஜெ., நகர் போலீசார், தாக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் ரவுடிகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. அங்குள்ள, டாஸ்மாக் கடையை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வட்டவடிவ நகர் மக்கள், அதிகாரிகளிடம் புகார் செய்தும், ஆளுங் கட்சியினரின் ஆசியால், 'பார்' நிரந்தரமாகிவிட்டது.
நடைபாதை 'பார்' பிரச்னை குறித்து, அரசு அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும், மக்களை அலட்சியப் படுத்துகின்றனர். மாநகராட்சி நடைபாதை முழுக்க ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. மேற்கண்ட பிரச்னையால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக முதல்வர் முன் வரவேண்டும்.
- குடியிருப்போர் பொதுநலச்சங்கத்தினர்,
வட்டவடிவ நகர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!