ஒரே நாளில் பல்லிளித்த சாலை கண்டுகொள்ளப்படாத அவலம் தரமாக அமைத்த அதிகாரிகள்
ஆவடி, மாநகராட்சி கலைஞர் நகரில் 'மாண்டஸ்' புயலின்போது அமைக்கப்பட்ட சாலை, ஒரே நாளில் பெயர்ந்து, அதன் தரம் குறித்து கேள்வி குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, அப்போதே நம் நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால், இது வரை, சாலையும் சீரமைக்கப்படவில்லை, 'தரமாக' சாலை அமைத்தவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது ஆவடி மாநகராட்சியின் அலட்சியத்தை கண்கூடாக காண்பிக்கிறது.
ஆவடி மாநகராட்சி 12வது வார்டில், கலைஞர் நகர் முதல் மற்றும் இரண்டாவது பிரதான சாலைகள் உள்ளன. இரண்டு பிரதான சாலைகளில் உள்ள 22 தெருக்களில், 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
எட்டு மாதங்களுக்கு முன், ஏற்கனவே இருந்த சாலையை பெயர்த்து, சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. பல மாதங்கள் பணிகள் கிடப்பில் போடப்பட்டு, ஒரு வழியாக 'மாண்டஸ்' புயலுக்கு முன், டிச., 8ம் தேதி அவசர அவசரமாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
ஆனால், சாலை அமைத்த மறுநாளே, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மணல் போல் உதிர்ந்தது. பணியில் முறைகேடு ஏற்பட்டிருப்பதாக அறிந்த அப்பகுதியினர், ஜல்லிக்கற்களை கை, கால்களில் கிளறி, 'வீடியோ'வாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வேகமாக பரவியது.
இது குறித்து துணை பொறியாளரிடம் கேட்டபோது, ''மழைக்காலம் முடிந்ததும், சாலையில் மற்றொரு 'லேயர்'அமைக்கப்படும்,'' என்றார்.
ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை பணி நடக்காததால் பொத்தல் விழுந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
இங்கு சாலை அமைத்து, ஒன்றரை மாதங்களில், ஆங்காங்கே பள்ளம் விழுந்து மோசமாக காட்சி அளிக்கிறது.
தரமற்ற சாலை அமைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடித்த சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் துணை பொறியாளர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!