கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர் மகனுடன் வீடு திரும்பினார்
கும்மிடிப்பூண்டி,திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் மனைவி ரோஜா, 44; கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதல் வார்டு அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்.
நேற்று முன்தினம் இவரும், இவரது மகன் ஜேக்கப், 22, என்பவரும் வீட்டில் இருந்து மாயமாகினர். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், கண்காணிப்பு கேமராவின் 'ஹார்டு டிஸ்க்' ஆகியவை மாயமாகி இருந்தன.
இருவரது மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது. இதனால், அவர்கள் கடத்தப்பட்டதாக பாதிரிவேடு போலீசில் ரமேஷ்குமார் புகார் அளித்தார்.
இதன்படி, நான்கு தனிப்படை போலீசார் தேடிய நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவே ரோஜாவும், அவரது மகனும், அதே காரில் வீடு திரும்பினர்.
அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
இதில், முகமூடி அணிந்திருந்த ஆறு பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் இவர்களை காரில் கடத்தி, ஆந்திர வனப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஓரிடத்தில் இறங்கி, மது குடிக்கச்சென்று உள்ளனர்.
அப்போது, ரோஜா அழுததை பார்த்த அந்த காரின் டிரைவர், அவர்கள் காருடன் தப்பிக்க உதவிஉள்ளார்.
அங்கிருந்து காரில் தப்பிய தாய், மகன் இருவரும், சத்தியவேடு வழியாக வீட்டிற்கு வந்தது தெரிந்தது. இவர்கள் அளித்த தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக சந்தேகிக்கும் போலீசார், மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!