Load Image
Advertisement

தி.மு.க., இரட்டை வேடம் மீண்டும் அம்பலம்!

என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சுதந்திர போராட்ட தியாகி, வ.உ.சிதம்பரம் பிள்ளையை பெருமைப்படுத்தும் விதமாக, சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது, திராவிட மாடல் அரசு. அதில், வ.உ.சி.,யின் ஒரிஜினல் கையெழுத்தில் உள்ள, 'பிள்ளை' என்ற சொல்லை நீக்கி அச்சிட்டுள்ளனர்.

'ஜாதி மதம் இல்லாத, சமத்துவ சமுதாயம் அமைப்போம்' என, கொள்கை முழக்கம் செய்து தம்பட்டம் அடிக்கும் திராவிட செம்மல்கள், வ.உ.சிதம்பரம் பிள்ளையை, வெறும், வ.உ.சிதம்பரம் என்று சுருக்கமாக அழைத்து அசிங்கப்படுத்தி, பேரின்பம் அடைகின்றனர்.

'செய்வதையே சொல்வோம், சொல்வதையே செய்வோம்' என்று கூறும் தி.மு.க.,வினர், இப்போது புதிதாக, ஒரு புரட்சியில் இறங்கி இருக்கின்றனர். அது என்ன தெரியுமா...

அதாவது, மாநிலம் முழுதும், தி.மு.க.,வில், 'வார்டு' அளவில் பொறுப்பில் உள்ளவர்களின் ஜாதி மற்றும் அவர்களது மொபைல் போன் எண் விபரத்தை, கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கும்படி, வட்டச் செயலர் மற்றும் ஒன்றியச் செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டு, அவர்களும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது, தி.மு.க., நிர்வாகிகளுக்கு சொல்ல முடியாத மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.

இந்த விஷயத்தில், முதல்வர் ஸ்டாலின் உடனே தலையிட்டு, ஜாதி விபரங்கள் கேட்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்' என்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அடிக்கடி சொல்வதற்கு என்ன அர்த்தம் என்பது, இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

வ.உ.சி., தன் வாழ்நாள் முழுதும், 'வ.உ.சிதம்பரம் பிள்ளை' என்றே கையெழுத்திட்டு வந்துள்ளார். தற்போது, பிள்ளை என்ற சொல்லை நீக்கியதன் வாயிலாக, அவரின் அடையாளத்தை மறைக்க, தி.மு.க., அரசு முற்பட்டுள்ளது. தி.மு.க.,வில், உள்ளாட்சி, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் போதெல்லாம், அங்கு ஜாதிய ஆதிக்கமே மேலோங்கி இருக்கும் என்பது ஊரறிந்த உண்மை.

எந்தத் தொகுதியில் எந்த ஜாதிக்கு அதிக ஓட்டுகள் உள்ளன என்ற அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு நடக்கும். அதை தவறாக நினைக்காத திராவிட செம்மல்கள், வ.உ.சி., கையெழுத்தில் உள்ள, பிள்ளை என்ற சொல்லை நீக்கியது, எப்படி நியாயமானதாகும்?

'ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல' என்று சொல்லியபடியே, அதற்கு எதிராக செயல்படும், தி.மு.க.,வினர், பிள்ளை என்ற ஜாதி பெயரை நீக்கியதன் வாயிலாக, தங்களின் இரட்டை வேடத்தை, மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளனர்.

இப்படி செய்து பாருங்களேன் திருமா!ஆர்.இந்தளூரான், சென்னையில் இருந்து எழுதுகிறார்: 'சிட்பண்ட்'டில் திருட்டு என்றாலும், சிவன் கோவிலில் திருட்டு என்றாலும், என்னையே குறை சொல்கின்றனர்' என, 'மிசா' காலத்தில் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார், முன்னாள் முதல்வர் கருணாநிதி.

அதுமாதிரி திருமாவளவனும், வேங்கைவயல் பிரச்னையானாலும், தர்மபுரி ஆணவக் கொலையானாலும், கோகுல்ராஜ் கொலையானாலும், கள்ளக்குறிச்சி விவகாரம் என்றாலும், சனாதனத்தின் மீது பழி போடுகிறார். சனாதனம் என்றால் பிராமணர்; அவர்கள் தான் காரணம் என்று மக்களும் நினைக்கின்றனர். இதை அறிந்து பிராமணர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

எனவே, திருமா அவர்களே... தினமும் எல்லா பத்திரிகைகளையும் வாங்கி படியுங்கள். ஒவ்வொரு நாளும் எத்தனை கொலை, கொள்ளை, ஆணவக் கொலை, மகளை பலாத்காரம் செய்த தந்தை, 'சிட்பண்ட்' நடத்தி, ஏலச்சீட்டு நடத்தி மோசடி, கோவிலில் சிலை திருட்டு, சினிமா தியேட்டர்களில் ரகளை, ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் கலவரம் செய்தது...

பஸ்களில் பட்டாக்கத்தியை வைத்து டிரைவர், கண்டக்டர்களை மிரட்டியது, சாலையோரக் கடைகளில் மாமூல் வாங்குவது, கஞ்சா கடத்தல், குடிபோதையில் மனைவியை எரித்துக் கொன்றது, இளம் பெண்களிடம் சில்மிஷம் செய்தது, கத்தியைக் காட்டி வழிப்பறி செய்தது என, குற்றங்கள் எல்லாவற்றையும், தனித்தனியாய் பிரியுங்கள்.

இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யார் யார், எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என, பட்டியல் தயார் செய்து, ஜாதி வாரியாக பிரித்து, அறிக்கை வெளியிடுங்களேன் பார்க்கலாம். அப்போது, வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் புலம்பும் சனாதன தர்மம் சாயம் வெளுத்து விடும்; மக்களுக்கும் உண்மை புரிந்து விடும்.

தவறு செய்தவர்கள், எந்த ஜாதியாக இருந்தாலும், அந்த ஜாதியினர் வருத்தம் அடைவர். 'இது, ஈ.வெ.ரா., மண், ஜாதி கிடையாது' என்றெல்லாம் சொல்லாதீர்கள். இங்கு ஜாதி உள்ளது; பள்ளியில் ஜாதி, தேர்தல் கூட்டணியில் ஜாதி, தொகுதி பங்கீட்டீல் ஜாதி, அமைச்சர் பதவியில் ஜாதி, பதவி உயர்வில் ஜாதி என, எங்கும் நீக்கமற ஜாதி நிறைந்துள்ளது.

அதனால், ஜாதி வாரியாக குற்றம் செய்தவர்களை பிரித்து, நீங்கள் அறிக்கை வெளியிட்டாலும், யாரும் குறை சொல்ல மாட்டார்கள். இந்த சாட்டையைக் கையில் எடுங்கள்; சவுக்கடி கொடுங்கள். சனாதன தர்மம் ஒழியட்டும், சமதர்மம் மலரட்டும். தமிழகம், இல்லை... இல்லை... தமிழ்நாடு பூத்துக் குலுங்கட்டும்.



வளம் பெறுமா தர்மபுரி மாவட்டம்?கே.மணிவண்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தர்மபுரி மாவட்டம் உதயமாகி, 58 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னும் அந்த மாவட்டம் வறட்சியின் கோரப் பிடியில் இருந்து மீளாதது, வேதனைக்குரியது. வள்ளல் அதியமான் பிறந்த பூமியில், விவசாயிகள் கை ஏந்தும் நிலையே உள்ளது. அதற்கு காரணம், இங்குள்ள நிலங்களில் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியே.

வற்றாத ஜீவ நதியான காவிரி, இம்மாவட்டம் வழியாக ஓடியும், இங்குள்ள மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

தர்மபுரி மாவட்ட மக்கள், நிலமிருந்தும் நீரின்மையால், அண்டை மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி செல்லும் அவல நிலை தொடர்கிறது. சங்க காலத்தில் தகடூராக இருந்த இவ்வூர், தர்மம் புரிந்ததனால், தர்மபுரி என்று பெயர் மாறியது.

'வள்ளல் அதியமான் பிறந்த பூமி, முருகனின் புகழ் பாடிய அவ்வையார் உலாவிய மண்' என்ற சிறப்பு பெற்ற இம்மாவட்ட மக்கள், பிழைப்புக்காக இடம் பெயர்வது ஏற்புடையதல்ல.

எனவே, ஒகேனக்கல் - -தர்மபுரி நீர் செறிவூட்டும் திட்டத்தை துவக்கி, நீரை எடுத்து வந்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நீலைகளிலும் நிரப்பி, இம்மாவட்ட மக்களின் விவசாயத்தை செழிக்க வைப்பதன் வாயிலாக, இங்குள்ள மனித சக்தி இடம் பெயர்வதை தடுக்கலாம்; அத்துடன், இங்குள்ளவர்களின் குடிநீர் பிரச்னையையும் தீர்க்க முடியும்.

இதற்கான அறிவிப்பை, வரும் பட்ஜெட்டிலேயே முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்; மாவட்ட மக்களின் வேதனை குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டும்!



news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அவரது கையெழுத்தை எடிட் செய்யும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? மற்ற ஆவணங்களில் இவ்விதம் செய்தால் மோசடி வழக்கை எதிர்கொள்ள வேண்டும் இவர்கள் சம நீதி அழகு மறைந்தவரின் கையெழுத்தை மாற்றுவதில்தான் காட்ட முடியும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement