ADVERTISEMENT
'கடந்த முறை கோட்டை விட்டுட்டோம்; இந்த முறை குறி தப்பாது. அவர், வசமாக எங்களிடம் மாட்டுவார்...' என, இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பற்றி கூறுகின்றனர், திரிணமுல் காங்., கட்சியினர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த, சட்டசபை தேர்தலின் போதே, கங்குலியை தங்கள் பக்கம் இழுக்க, கடும் முயற்சி செய்தார், மம்தா பானர்ஜி.
அதேபோல, பா.ஜ., தலைவர்களும் கங்குலிக்கு வலை வீசினர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதால், கங்குலிக்கு அங்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது; இதை பயன்படுத்த, இரு கட்சிகளும் போட்டி போட்டன.
எந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும், மற்ற கட்சியின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும் என்பதால், உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி, கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனையில் போய் படுத்துவிட்டார், கங்குலி.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, சமீபத்தில் மம்தாவின் பிறந்தநாளுக்கு, பூங்கொத்து உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்திருந்தார், கங்குலி.
இதை சற்றும் எதிர்பார்க்காத மம்தா, 'கங்குலியை எப்படியாவது சம்மதிக்க வைத்து, நம் கட்சிக்கு இழுத்து வந்து விடுங்கள். அடுத்தாண்டு நடக்கஉள்ள லோக்சபா தேர்தலின் போது, அவரின் பிரசாரம் நமக்கு பெரிதும் பயன்படும்...' என, கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார்.
'மம்தா வீசியுள்ள துாண்டிலில் கங்குலி என்ற மீன் சிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...' என்கின்றனர், இங்குள்ள சக அரசியல்வாதிகள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!