செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்நிலைய வளாகத்தில், 1935ம் ஆண்டு, ரயில்வே காவல் நிலையம், ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று சப் - இன்ஸ்பெக்டர் உட்பட, 35 போலீசார் கொண்டு துவக்கப்பட்டது.
செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலையத்திற்கு உட்பட்டு, 31 ரயில் நிலையங்கள் உள்ளன. சிங்கபெருமாள்கோவில் - விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரையிலும், செங்கல்பட்டு - அரக்கோணம் வரையிலும், செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.
40 விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் உட்பட, 200க்கும் மேற்பட்ட ரயில்கள் தினமும் கடக்கின்றன.
இப்பகுதிகளில், ரயிலில் அடிபட்டு இறப்போர் மற்றும் திருட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை, மேற்கண்ட போலீசார் கவனித்து வருகின்றனர்.
தற்போது, செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று சப் - இன்ஸ்பெக்டர், 11 போலீசார் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக, 24 போலீசார் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், போலீசார் பற்றாக்குறை உள்ள சூழலில், அனைத்து பணிகளையும், தற்போது பணியில் உள்ள குறைந்த அளவிலான போலீசாரே மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், பணிச் சுமை காரணமாக, ஒரு போலீசார் விடுப்பு எடுத்தால், மற்றொரு போலீசார் விடுப்பு எடுக்க முடியாத சூழல் உள்ளது.
இதனால், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் எண்ணற்ற ரயில் விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பணியிடங்களைநிரப்பக்கோரி, தமிழக அரசு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு, தொடர்ந்து கருத்துரு அனுப்பி வருகின்றனர்.
ஆனால், பணிகள் நிரப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, விழா காலங்களில், ரயில்களில் ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், நான்கு மாவட்டத்திற்கு ஒரே ஒரு ரயில்வே காவல் நிலையம் மட்டுமே செங்கல்பட்டில் இயங்கி வருகிறது.
காஞ்சிபுரம், திண்டிவனத்தில், காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள போலீசார் பணியிடங்களை நிரப்ப, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு, ஒரே ஒரு ரயில்வே காவல் நிலையம் மட்டுமே, செங்கல்பட்டில் இயங்கி வருகிறது.செங்கல்பட்டு - சிங்கபெருமாள் கோவில் வரையிலான ஒன்பது கி.மீ., செங்கல்பட்டு - அரக்கோணம் வரையிலான 62 கி.மீ., மற்றும் செங்கல்பட்டு - விக்கிரவாண்டி வரையிலான 104 கி.மீ., தொலைவு ரயில் தடங்கள் இந்த காவல் நிலையத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் பற்றாக்குறையால், கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்படுகிறது. ரயில்வே காவலர்கள் பணிச்சுமையால் அவதிப்பட்டு வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும், இப்பகுதிகளில் ரயிலில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு, கண்காணிப்பு பணியில் போலீசாரின் பற்றாக்குறையே காரணமாக பார்க்கப்படுகிறது.எனவே, காஞ்சிபுரம், திண்டிவனம் ஆகிய பகுதிகளில், புதிய ரயில்வே காவல் நிலையம் ஏற்படுத்த, அரசுக்கு கருத்துரு அனுப்பி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த, அரசு முன்வர வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!