Load Image
Advertisement

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

மானிய விலையில் உபகரணங்கள்
பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ப.வேலூர், ஜன. 25--
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், கபிலர்மலை ஒன்றியம் வடகரையாத்தூர் கிராம த்திற்கு தார்பாய்கள், மின்கள தெளிப்பான்கள்,(பேட்டரி ஸ்பிரேயர்) வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அறிவாள், கடப்பாரை, காறைசட்டி) ஜிப்சம், ஜிங்சல்பேட், மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல் ,கணினி சிட்டா, ரேஷன் கார்டு நகல்களை சமர்ப்பித்து, கபிலர்மலை உதவி வேளாண்மை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளவும். வேளாண்மை உபகரணங்களின் தொகுப்பு பெறுவதற்கு சிறு,குறு விவசாயி களுக்கான சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என கபிலர்மலை வேளாண்மை உழவர் நலத்துறை உதவி வேளாண்மை அலுவலர் ராதாமணி தெரிவித்துள்ளார்.
நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஜன. 25-
தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர். நில அளவையர் முதல், கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும். கள பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும். இயக்ககத்தால் நிறுத்தப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட பயண படியை, உடனடியாக விடுவிக்க வேண்டும். புல உதவியாளர்களை, காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்
சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஜன. 25-
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பாரபட்சம் இன்றி, 10 சதவீதம் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில், அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
எலச்சிபாளையம், ஜன. 25- -
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் நடந்த, எம்.ஜி.ஆரின், 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு, பரமத்தி வேலூர் எம்.எல்.ஏ., சேகர் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி, பேச்சாளர் நடிகர் வையாபுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சோலார் விளக்கு பொறி
செயல் விளக்க முகாம்
மல்லசமுத்திரம், ஜன. 25- -
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் வட்டாரத்திற்கு உட்பட்ட, அவினாசிப்பட்டி கிராமத்தில், வேளாண்மை -உழவர் நலத்துறையில் செயல்படும், அட்மா திட்டத்தின் கீழ் நடந்த சோலார் விளக்கு பொறி குறித்த செயல் விளக்க முகாமிற்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தனம் தலைமை வகித்தார். சோலார் விளக்கு பொறியின் செயல்பாடுகள், தானியங்கி முறை, பகலில் சூரிய ஒளியினை ஈர்த்து மாலை நேரங்களில் தீமை செய்யும் பூச்சிகளை கவர்தல், பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
நாளை கிராம சபைக்கூட்டம்
நாமக்கல், ஜன. 25-
'குடியரசு தினத்தையொட்டி, நாளை மாவட்டத்தில் உள்ள, 322 கிராம பஞ்.,துகளில், கிராம சபைக்கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 322 கிராம பஞ்.,களிலும், நாளை குடியரசு தினத்தன்று, காலை, 11:00 மணிக்கு, கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், கிராம பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம பஞ்., தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரும் 27ல் நாமக்கல்லில்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல், ஜன. 25-
'வரும், 27ல், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், இம்மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும், 27 காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், சமூக விலகலை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கைகளை நன்கு சுத்தம் செய்தும், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.
சாலை பாதுகாப்பு பேரணி
ராசிபுரம், ஜன.25-
ராசிபுரம் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி சார்பில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக துவங்கிய பேரணிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கருணாகரபன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
ராசிபுரம் டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், வட்டார மோட்டார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நித்யா, ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். இப்பேரணியில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், ஆட்டோ ஒட்டுநர்கள், சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.
ராசிபுரம் வட்டார விவசாயிகள்
ஆலோசனை கூட்டம்
ராசிபுரம், ஜன.25-
வேளாண்மை உழவர் நல துறையில், அட்மா திட்டத்தில் ராசிபுரம் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அட்மா தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில் குமார், தோட்டக்கலை உதவி இயக்குனர், யோகநாயகி, கால்நடை உதவி மருத்துவர், சரவணன் பட்டு வளர்ச்சி உதவி ஆய்வாளர் கீதா ஆகியோர், வேளாண்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினர். அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் சந்திரசேகரன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் விக்னேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.
துாய்மை பணியாளர்களுக்கு
கண் பரிசோதனை முகாம்
பள்ளிபாளையம், ஜன. 25-
பள்ளிபாளையம் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து துாய்மை பணியாளர்களுக்கு, கண் பரிசோதனை முகாமை நேற்று நடத்தின. நகராட்சி சேர்மன் செல்வராஜ், துணை சேர்மன் பாலமுருகன் ஆகியோர் மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில், துாய்மை பணியாளர்கள் 78 பேருக்கு கிட்ட பார்வை, துாரப்பார்வை உள்ளிட்ட கண் சம்பந்தமான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ராசிபுரத்தில் ஸ்கேட்டிங் சென்று
குழந்தைகள் விழிப்புணர்வு
ராசிபுரம், ஜன.25-
குழந்தைகளுக்கு எதிரான வன் கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி சாலையில் ஸ்கேட்டிங் சென்று குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக ராசிபுரத்தில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தி.மு.க.,-எம்.பி., ராஜேஷ்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணி பட்டணம் சாலை, ஆத்துார் சாலை, சேலம் சாலை வழியாக, 2 கிலோமீட்டர் துாரத்திற்கு, குழந்தைகள் ஸ்கேட்டிங்கில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொல்லிமலையில்
கார் விபத்து; ஒருவர் பலி
சேந்தமங்கலம், ஜன. 25-
கொல்லிமலையில், கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன், 39. தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சத்யாதேவி, 36. ரகுநாதனின் சித்தப்பா லோகநாதன், 57, சித்தி லட்சுமி, 48. இவர்கள் நான்கு பேரும் நேற்று அதிகாலை, வாடகை காரில், கொல்லிமலையில் உள்ள எட்டிக்கையம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். காரை, காசிபாளையத்தை சேர்ந்த டிரைவர் முகுந்தன், 23, ஓட்டினார். கொல்லிமலை 67வது கொண்டை ஊசி வளைவு, நாச்சியம்மன் கோவில் அருகே கார் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரகுநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தேங்காய் பருப்பு
ஏலம் ரத்து
ப.வேலூர், ஜன. 25--
ப.வேலூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேங்காய் பருப்பு ஏலம் ரத்து செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் ப.வேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். குடியரசு தினத்தை முன்னிட்டு வரும், 26 ஆம் தேதி விடுமுறை என்பதால், அன்று நடக்க இருந்த தேங்காய் பருப்பு ஏலம் ரத்து செய்யப்படுவதாக தேசிய வேளாண்மை துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
அபாய கிணற்றுக்கு தடுப்பு
சுவர் அமைக்கப்படுமா?
வெண்ணந்தூர், ஜன. 25-
தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள அபாய கிணறுக்கு தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அருகே உள்ள அத்தனுார் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட, சேலம்- - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே சர்வீஸ் சாலை ஓரம், தடுப்பு சுவர் இல்லாத அபாய கிணறு உள்ளது. இதனால், இவ்வழியாக வாகனங்கள் வரும் போது, சாலையை கடக்க முயலும் ஆடு, மாடுகள் இந்த கிணற்றில் தவறி விழுந்து வருகின்றன. மேலும், இவ்வழியே வரும் வாகன ஓட்டிகளும், தடுப்பு சுவர் இல்லாத கிணற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே, இப்
பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, அத்தனுார் பேரூராட்சி நிர்வாகம், கிணற்றுக்கு உடனடியாக தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கம் மருத்துவமனையில்
சிறப்பு மருத்துவ முகாம்
நாமக்கல், ஜன. 25-
நாமக்கல்-திருச்சி ரோட்டில் அமைந்துள்ள தங்கம் மருத்துவமனை, மக்களின் நன்மதிப்பை பெற்று சிறந்த முறையில் மருத்துவ சேவையாற்றி வருகிறது. இம்மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம், திருச்சி மாவட்டம், முசிறியில் நடந்தது. முகாமை முசிறி எம்.எல்.ஏ., தியாகராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில், தங்கம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் குழந்தைவேல், மருத்துவமனையில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சை முறை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார். முகாமில் முசிறி, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.
வெண்ணந்துார் பகுதியில்
நெல் அறுவடை பணி தீவிரம்
வெண்ணந்துார், ஜன. 25-
வெண்ணந்துார், அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, சவுதாபுரம், மதியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். கடந்த ஆண்டு இறுதியில், திருப்திகரமாக மழை பெய்ததால் இப்பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினர். தற்போது நெற் பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், வெண்ணந்துார், சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிக விளைச்சல் காரணமாக, 10 ஆண்டுகளுக்கு பின், நெல் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement