Load Image
Advertisement

செய்திகள சில வரிகளில்... கரூர்

இறைச்சி கழிவுகளால்
சுகாதார கேடு
கரூர், ஜன. 25-
கரூர் -- சேலம் பழைய சாலை, வெங்கமேடு பாலம் அருகே, அமராவதி ஆற்றின் பழைய ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில், வீடுகள், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரே செல்கிறது. மேலும், வெங்கமேடு பகுதியில், 20க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி, மீன் விற்பனை கடைகள் உள்ளன. அவற்றிலிருந்து வெளியேறும் இறைச்சி கழிவுகளை ராஜவாய்க்காலில் கொட்டி விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, ராஜ வாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


157 பஞ்.,களில் நாளை
கிராம சபை கூட்டம்
கரூர், ஜன. 25-
கரூர் மாவட்டத்தில், 157 பஞ்.,களில் நாளை கிராம சபை கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
குடியரசு தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம பஞ்சாயத்துகளில், கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்தில், பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், துாய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திம்மாச்சிபுரத்தில்
முதியவர் மீது மொபெட் மோதல்
கிருஷ்ணராயபுரம், ஜன. 25-
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த திம்மாச்சிபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன், 65. இவர், கடந்த 22ல் மாலை 6 மணி அளவில் திம்மாச்சிபுரம் பஸ் ஸ்டாப் அருகே திருச்சி - கரூர் நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த குளித்தலை பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ், 29, என்பவர் ஓட்டிவந்த டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபெட் முருகேசன் மீது ‍மோதியது. இதில் காயமடைந்த அவர், குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
சிந்தலவாடி அருகே
திருடப்பட்ட வாகனம் மீட்பு
கிருஷ்ணராயபுரம், ஜன. 25-
சிந்தலவாடி அருகே, ஜீப் வாகனத்தை திருடிய நபரை, லாலாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணராயபுரம் அருகே, சிந்தலவாடியை சேர்ந்தவர் குழந்தைவேல், 42. இவரது 'பொலீரோ பிக் அப்' வாகனத்தை, கடந்த 22ம் தேதி, வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, பொலீரோ ஜீப்பை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைவேல், இதுகுறித்து, லாலாப்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், திருட்டுப்போன வாகனம், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜீப்பை பறிமுதல் செய்ததோடு, வாகனத்தை திருடியதாக, லால்குடி பகுதியை சேர்ந்த பாரதிராஜா 33, என்பவரை கைது செய்தனர்.
கிருஷ்ணராயபுரம் யூனியன்
அலுவலக சாதாரண கூட்டம்
கிருஷ்ணராயபுரம், ஜன. 25-
கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலக சாதாரண கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு கிருஷ்ணராயபுரம் யூனியன் தலைவர் சுமித்திராதேவி தலைமை வகித்தார். இதில் யூனியன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுகாதார மேம்பாடு, குடிநீர் வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், யூனியன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் மக்களுக்கு தேவையான சிமென்ட் சாலை அமைத்தல், குடிநீர் குழாய் பைப் லைன் அமைத்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள், யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பருத்தி பஞ்சு எடுக்கும் பணியில்
விவசாய தொழிலாளர்கள்
கிருஷ்ணராயபுரம், ஜன. 25-
கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் பருத்தி பஞ்சு எடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மகிளிப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள் பரவலாக விளை நிலங்களில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது செடிகளில் பருத்தி காய்கள் பிடித்து பஞ்சு வெடித்து வருகிறது. இந்த செடிகளில் இருந்து பருத்தி பஞ்சு எடுக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக
கார்கள் நிறுத்தப்படுவதால் அவதி
கரூர், ஜன. 25-
கரூர் - திருச்சி சாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, உழவர் சந்தை செயல்படுகிறது. அங்கு நாள்தோறும் காலை, மாலை நேரங்களில்,
நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உழவர் சந்தை அருகே திருச்சியில் சாலையில் கார்கள், வேன்களை பல மணி நேரம் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். அப்பகுதியில் இருபுறமும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள், நீண்ட வரிசையில் நிற்போது, விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, கரூர் உழவர் சந்தை பகுதியில் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும்.
சாலைகளை ஆக்கிரமித்த
சீமை கருவேல மரங்கள்
கரூர், ஜன. 25-
கரூர் அருகே, கொளந்தானுாரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து
வருகின்றனர். அப்பகுதி மக்கள் காலை கடன்களை கழிக்கவும், துணி துவைக்கவும், குளிக்கவும் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்கின்றனர். இதனால், கொளந்தானுாரில் இருந்து அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்ல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது தார் சாலையை மறைக்கும் அளவுக்கு சீமை கருவேல மரங்கள் அதிகளவில் முளைத்துள்ளன. எனவே, கொளந்தானுாரை சேர்ந்த மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளியில்
சாலை பாதுகாப்பு வார விழா
கரூர், ஜன. 25-
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. இதில், வட்டார கல்வி அலுவலர் பாண்டித்துரை தலைமை வகித்தார். ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உதவி பேராசிரியர் சிலம்பரசன் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், 'வாய்ஸ் டிரஸ்ட்' அமைப்பின் உதவி இயக்குனர்கள் பூவேந்தன், விவேக், டோல்கேட் நிர்வாக அலுவலர் சக்திவேல் உட்பட பலர்
பங்கேற்றனர்.
போக்குவரத்து காவல் துறை
சார்பில் மருத்துவ முகாம்
குளித்தலை, ஜன. 25-
குளித்தலையில், சாலை பாதுகாப்பு வார விழாவை ஒட்டி, போக்குவரத்து காவல் துறை சார்பில், போலீசார், ஓட்டுனர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது
அண்ணா திருமண மண்டபத்தில் நடந்த இம்முகாமை, குளித்தலை டி.எஸ்.பி., ஸ்ரீதர் தொடங்கிவைத்தார். இதில், குளித்தலை பகுதியை சேர்ந்த போலீசார், ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோருக்கு திருச்சியை சேர்ந்த தனியார் மருத்துவமனை குழுவினர் பங்கேற்று, கண் குறைபாடு, சர்க்கரை, ரத்த அழுத்தம், மூட்டு வலி, இருதய கோளாறு ஆகியவற்றுக்கு பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை, ஆலோசனை, மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
வீட்டில் மயங்கி விழுந்த
கர்ப்பிணி பெண் பலி
கரூர், ஜன. 25-
கரூர் அருகே, வீட்டில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.
பீகார் மாநிலம், பாரிசங்கரமம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார், 27; இவர், கரூர் மாவட்டம், கோதுாரில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு, பூஜாகுமாரி, 25; என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பூஜாகுமாரி கடந்த, 23ல் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாய்க்காலில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி
கிருஷ்ணராயபுரம், ஜன. 25-
குளித்தலையில் வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.
குளித்தலை, தேவதானத்தை சேர்ந்தவர் தியாகராஜன், 55. இவர், அம்மா பேரவை ஒன்றிய செயலாளராக இருந்தார். மேலும், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் வாய்க்காலில் குளிக்க சென்றார். அப்போது வலிப்பு ஏற்பட்டு, நீரில் அடித்து செல்லப்பட்டார். வெகு நேரமாக தியாகராஜன் வராததால் குடும்பத்தினர் அவரை தேடினர். வாய்க்கால் படித்துறையில் இருந்த துணி, காலணியை கண்டு, அதிர்ச்சி அடைந்து, முசிறி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மருதுர் பஸ் ஸ்டாப் அருகே, வாய்க்காலில் தியாகராஜன் சடலம் நேற்று மீட்கப்பட்டது. இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர், ஜன. 25-
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் அமல்தாஸ் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ஒரே திட்டத்தின் கீழ், ஒரே பணியை செய்து வரும் ஊழியர்களுக்கு, ஊதிய மாற்றத்தில் பாகுபாடு காட்டுவதை நிறுத்த வேண்டும், என்.ஏ.சி.ஓ., ஆணைப்படி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், பணிபுரியும் ஊழியர்களுக்கு, 10 சதவீத ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்ட விரோத மது விற்பனை
5 பேர் கைது
கரூர், ஜன. 25-
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது பானம் விற்பன‍ை செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார், நேற்று முன்தினம் தோகைமலை, குளித்தலை, வாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக மாரியாயி, 42; கன்னியம்மாள், 62; காமராஜ், 52; கோபிநாத், 50; முருகேசன், 51; ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 33 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கல்வி அளித்தல்
விழிப்புணர்வு பேரணி
கரூர், ஜன. 25-
அரவக்குறிச்சி அருகே, கொ.சீத்தப்பட்டியில், அரவக்குறிச்சி வட்டார வள மையம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கல்வி அளித்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை, கொ.சீத்தப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்ராஜ் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற இப்பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், கொ.சீத்தப்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பொற்கொடி, புதிய பாரத எழுத்தறிவு இயக்க ஒருங்கிணைப்பாளர் லதா உட்பட பலர் பங்கேற்றனர்.
மேம்பாலங்களில்
முளைத்த மரக்கன்றுகள்
கரூர், ஜன. 25-
கரூர் அருகே, தேசிய நெடுஞ்சாலை மேம்பால சுவர்களில், மரக்கன்றுகள், செடிகள் முளைத்துள்ளதால் பாலம் சேதமடையும் அபாயம் உள்ளது.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு, கிராம சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, தோரணக்கல்பட்டி, ஏமூர், புலியூர் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பெய்த மழை காரணமாக, பெரும்பாலான இடங்களில் மேம்பால சுவர்களில் மரங்கள், செடிகள் அதிக அளவில் முளைத்துள்ளன. இதனால், மேம்பாலங்களின் சுவர்கள் சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே, மேம்பால சுவர்களில் முளைத்துள்ள மரங்கள், செடிகளை உடனடியாக அகற்ற, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தென்னிலையில்
27ல் மனுநீதி
நாள் முகாம்
கரூர், ஜன. 25-
கரூர் மாவட்டம், புகழூர் தாலுகாவுக்கு உட்பட்ட தென்னிலை மேல்பாகத்தில் வரும் 27ம் தேதி பிற்பகல், 3:00 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
இம்முகாமில் பல்வேறு அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர்.
மேலும், மருத்துவ முகாம், அரசு துறை சார்பில் கண்காட்சி ஆகியவையும் நடக்கின்றன.
நில அளவை அலுவலர்கள்
சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர், ஜன. 25-
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், களப் பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும், ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தரம் குறைக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை, உடனடியாக நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியத்தில், புல உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ஞானதம்பி, கரூர் கோட்ட தலைவர் தங்கவேல், மாவட்ட செயலாளர் பாஸ்கர், பொருளாளர் தமிழரசன் உட்பட பலர்
பங்கேற்றனர்.
மரப்பட்டைகளை ஏற்றி சென்ற
வேனில் தீ விபத்து
கரூர், ஜன. 25-
கரூர் அருகே, மரப்பட்டைகளை ஏற்றி சென்ற ஈச்சர் வேன், தீப்பிடித்து எரிந்தது.
கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ஞானவேல், 32; டிரைவர். இவர் நேற்று இரவு, 7:00 மணிக்கு, அரவக்குறிச்சி அருகே, காக்காவாடியில் இருந்து ஈச்சர் வேனில், மரப்பட்டைகளை ஏற்றிக்கொண்டு, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, வாங்கப்பாளையம் பிரிவு மேம்பாலம் பகுதியில், சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஈச்சர் வேனின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், டிரைவர் ஞானவேல், வேனில் இருந்து இறங்கி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, கரூர் தீயணைப்பு வீரர்கள் சென்று, தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட பழுது காரணமாக, வேனில் தீப்பிடித்தது தெரியவந்தது. இந்த விபத்தால், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement