Load Image
Advertisement

செய்திகள் சில வரிகளில்... தர்மபுரி

ரேஷனில் எம்.எல்.ஏ., ஆய்வு
தர்மபுரி: தர்மபுரி எம்.ஜி.ஆர்., நகரிலுள்ள ரேஷன் கடையில், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் மற்றும் எடையை அவர் ஆய்வு செய்தார். மேலும், ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களிடம், மாதந்தோறும் முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
மண்ணுளி பாம்பு மீட்பு
அரூர்: அரூர் முருகர் கோவில் தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு மூன்றடி நீள மண்ணுளி பாம்பு இருந்தது. அதைக்கண்ட அப்பகுதி இளைஞர்கள் மண்ணுளி பாம்பை மீட்டு, அரூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின், வனத்துறையினர், அதை வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
வார்டுகளில் மேயர் ஆய்வு
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 7 மற்றும் 11வது வார்டுக்கு உட்பட்ட புதிய வசந்த் நகர், ராஜிவ் நகர், ராஜேஸ்வரி நகர், பழைய வசந்த் நகர், ஜெ.ஜெ., நகர், ரெயின்போ கார்டன் ஆகிய பகுதிகளில் கழிவு நீர் கால்வாய், குடிநீர் பிரச்னை இருப்பதாக, பொதுமக்கள் புகார் செய்திருந்தனர். இதையடுத்து, மாநகர மேயர் சத்யா, இப்பகுதிகளில் ஆய்வு செய்து, சாக்கடை கால்வாய், குடிநீர் பிரச்னைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர், பிரச்னைகளை சரி செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், கவுன்சிலர் மாரக்கா உட்பட பலர் உடனிருந்தனர்.
அரசு பள்ளி மாணவி மாயம்
ஓசூர்: சூளகிரி தாலுகா, காலிங்காவரத்தை சேர்ந்தவர், 12 வயது சிறுமி; அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 21ல் காலை, 11:00 மணிக்கு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை புகார்படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓசூர்: ராயக்கோட்டை அடுத்த நாகமங்கலம் பஞ்., கடூர் கிராமத்தில், கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில், ஒன்றிய செயலாளர் பிரவீன் தேஜஸ்குமார் தலைமையில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில், மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி, பா.ஜ., கட்சியில் சேர, தாமாக முன்வந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் பலி
ஓசூர்: ஓசூர் அருகே வெங்கடேஷ்புரத்தை சேர்ந்தவர் கல்யாண்செட்டி, 62; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்; இவரும், ஓசூர் பஸ்தி திருமலை நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் செய்யும் முனிராஜ், 48, என்பவரும் கடந்த, 22ல் மாலை, பேரிகை - பாகலுார் சாலையில் டி.வி.எஸ்., சுசூகி மொபட்டில் சென்றனர்.
முனிராஜ் மொபட்டை ஓட்டி சென்றார். கர்னப்பள்ளி அருகே சென்றபோது, மொபட் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கல்யாண்செட்டி, முனிராஜ் ஆகியோர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் கல்யாண்செட்டி இறந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
சத்துணவு கூடம் கட்ட பூமிபூஜை
ஓசூர்: சூளகிரி ஒன்றியம், சின்னாரன்தொட்டி பஞ்., குடிசாதனப்பள்ளி கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய சத்துணவு கூடம் அமைக்க, வேப்பனஹள்ளி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 5.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி, பூமிபூஜை செய்து நேற்று பணியை துவக்கி வைத்தார். பள்ளியின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கு புரவலர் திட்டம் துவங்கப்பட்டு அதன் மூலம், 52 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டது. அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், சூளகிரி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
எருது விடும் விழா: 7 பேர் கைது
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி போலீசார் ஒட்டூர் மாரியம்மன் கோவில் அருகில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு அனுமதியின்றி எருது விடும் விழா நடத்த முயன்ற, அதே ஊரை சேர்ந்த வைகுண்டம், 52, வேடியப்பன், 70 உள்பட, ஏழு பேரை கைது செய்தனர்.
கற்கள் கடத்தியவருக்கு காப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., டேம் போலீசார் நேற்று முன்தினம் சோக்காடி சாலையில் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனையிட்டதில், 2 யூனிட் கற்கள் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த பெரிய மோட்டூர் பகுதி ஏழுமலை, 40, என்பவரை போலீசார் கைது செய்தனர்.இ.கம்யூ., நிர்வாகிக்கு
கொலை மிரட்டல்
ஓசூர், ஜன. 25-
அஞ்செட்டி தாலுகா, தக்கட்டியை சேர்ந்தவர் முனிராஜ், 48; இ.கம்யூ., கட்சி பகுதி கமிட்டி செயலாளர்; இவரை கடந்த, 3ல் காலை மொபைல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக, அஞ்செட்டி போலீசில் நேற்று முன்தினம் முனிராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணை வைத்து விசாரித்து வருகின்றனர்.
பனியால் மருத்துவமனைகளில்
குவியும் நோயாளிகள் கூட்டம்
தர்மபுரி, ஜன. 25-
தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்தது. இதனால், பல ஆண்டுகளுக்கு பின், மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள் நிரம்பின. விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால், மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்துக்கு பின், தர்மபுரி உட்பட, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து குளிர்ச்சியான சீ‍தோஷ்ண நிலை நிலவி வருகிறது. கடந்த சில தினங்களாக, மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், குழந்தைகள் உட்பட பெரும்பாலான பொதுமக்கள் சளி தொல்லையால் அவதியடைந்து வருகின்றனர். இதனால், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி உட்பட, தனியார் மருத்துவமனைகளிலும் சளிக்கு சிகிச்சை பெற மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் சங்க
கிளை துவக்க விழா
ஓசூர், ஜன. 25-
சூளகிரி அருகே மேல்புளியரசியில், தமிழக விவசாயிகள் சங்க கிளை துவக்க விழா மற்றும் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கிளை தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். மாநில தலைவர் ராமகவுண்டர், சங்க கொடியேற்றி பேசினார். மேல்புளியரசியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால், உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலுமலை, சாமல்பள்ளம் தேசிய நெடுஞ்சாலைகளில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிளை செயலாளர் மாதப்பன், துணைச்செயலாளர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் கண்ணப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

லாரி டிரைவருக்கு கொலை
மிரட்டல் விடுத்தவர் கைது
ஓசூர், ஜன. 25-
திருப்பத்துார் மாவட்டம், மாங்குப்பத்தை சேர்ந்தவர் கீர்த்திவர்மா, 24, லாரி டிரைவர்; கடந்த, 22ல், தனியார் நிறுவனத்தில் டேங்கர் லாரியில் சென்று, தண்ணீர் நிரப்பி விட்டு திரும்பி கொண்டிருந்தார். சந்தைமேடு கிராமத்திலுள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, நாகமங்கலத்தை சேர்ந்த சிலர், லாரியை தடுத்து நிறுத்தி ஊருக்குள் வேகமாக செல்வதாக கூறி அவரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், டிரைவர் கீர்த்திவர்மாவை தாக்கிய அவர்கள், மீண்டும் லாரியை வேகமாக ஓட்டினால் கொலை செய்து விடுவதாக மிரட்டனர். இது தொடர்பாக, கெலமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் கீர்த்திவர்மா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, நாகமங்கலத்தை சேர்ந்த ரகு, 38, என்பவரை கைது செய்தனர். மேலும், செந்தில், பிரவீன், திப்பன் ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி, ஜன. 25-
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில், சாராயம் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கலால் உதவி ஆணையர் குமரேசன், பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் ஆகியோர் இப்பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரெட் கிராஸ் சொசைட்டி கிளை செயலாளர் செந்தில்குமார், தலைமை ஆசிரியர் வேந்தன், மருத்துவ அலுவலர் சோமசுந்தரம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பவுன்ராஜ் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
ஈச்சர் லாரி மோதி மாணவர் பலி
ஓசூர், ஜன. 25-
ஓசூர் அருகே, பேலகொண்டப்பள்ளியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி மகன் சுதீப், 15, மற்றும் சென்னாரெட்டி மகன் நந்தகிஷோர், 15; இருவரும், பூனப்பள்ளி அருகே தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மாலை, 5:10 மணிக்கு, பள்ளியில் இருந்து வீட்டிற்கு, ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றனர். நந்தகிஷோர் பைக்கை ஓட்டினார். பேலகொண்டப்பள்ளி சாலையில், பூனப்பள்ளியிலுள்ள பெட்ரோல் அருகே சென்றபோது, எதிரே வந்த ஈச்சர் லாரியும், பைக்கும் மோதின. இதில், லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிய இரு மாணவர்களும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மாணவன் சுதீப் இறந்தார். நந்தகிஷோருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர். விவசாய நிலத்தில் எரிந்த நிலையில் டூவீலர்
போச்சம்பள்ளி, ஜன. 25-
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, புளியாண்டப்பட்டி, பிரிவு சாலையில் மூர்த்தி, 36, என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
இவரின் விவசாய நிலம் பரசுராமகவுண்டர் நகர் பகுதியில்
உள்ளது. அந்த நிலத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட நிலையில், ஸ்கூட்டி மொபட் இருந்ததை கண்டு அதிர்ச்சி
யடைந்தார்.
அவர் மத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
மழைவாழ் மக்களிடம் குறைகேட்ட பா.ஜ.,வினர்
ஓசூர், ஜன. 25-
கெலமங்கலம் அடுத்த பொம்மதாத்தனுார் பஞ்., இருளபட்டியில், பா.ஜ., கட்சி எஸ்.டி., அணி மாநில தலைவர் சிவப்பிரகாசம், செயலாளர் பாப்பண்ணா, கட்சியின் மாநில துணைத்தலைவர் நரேந்திரன் ஆகியோர், நிர்வாகிகளுடன் சென்று, 100க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
அப்போது, 50 குடும்பங்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டிருப்பது தெரிந்தது. பல ஆண்டுகளாக விவசாயம் செய்யும் நிலங்களுக்கு, அரசு சார்பில் பட்டா பெற்று தர வேண்டும். யானைகளால் விவசாய பயிர்கள் நாசமாகி வருவதால், தமிழக அரசு சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், யானைகள் நிலங்களுக்கு வராமல் தடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.
இக்கோரிக்கைகளை அரசின்
கவனத்திற்கு கொண்டு செல்வதாக, பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement