Load Image
Advertisement

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

கூட்டணியா? போட்டியா?
ச.ம.க., இன்று அறிவிப்பு
ஈரோடு, ஜன 25-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வீடியோ கான்பரஸில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், ஏதாவது ஒரு முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்றனர். சிலர் மட்டுமே, தனித்து போட்டியிடலாம் என்றனர். இடைத்தேர்தலில் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பதை நாளை (இன்று) அறிவிக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில், ஈரோட்டில் இருந்து வடக்கு மாவட்ட செயலாளர் குருநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மயானம் ஆக்கிரமிப்பு;
அகற்ற வலியுறுத்தி மனு
அந்தியூர், ஜன. 25---
பொது மயானத்தில் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை, அகற்ற வலியுறுத்தி, மக்கள் மனு தந்தனர்.
அந்தியூர் அருகே குப்பாண்டபாளையம் பகுதி மக்கள், மயான வசதி கேட்டு, அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். மனு விபரம்: குப்பாண்டபாளையம் பஞ்., பெருமாள் கோவில் புதுார் அருகேயுள்ள மயானத்தை, அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தி
வந்தனர். ஒரு சிலர் கம்பிவேலி அமைத்து
ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து, கம்பி வேலியை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். பெற்றுக் கொண்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை
எடுப்பதாக உறுதி கூறினர்.
பச்சமலை கோவிலில்
உண்டியல் திறப்பு
கோபி, ஜன. 25-
கோபி பச்சமலை முருகன் கோவிலில், ஆறு நிரந்தர உண்டியல், ஒரு அன்னதான உண்டியல் உள்ளது. நிரந்தர உண்டியல்கள் காலாண்டுக்கு ஒருமுறை, அன்னதான உண்டியல் மாதந்தோறும், கணக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில், ஒரு அன்னதான உண்டியல் நேற்று திறக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில், 8,749 ரூபாய் கிடைத்தது. கோவில் நிர்வாக கணக்கில், வங்கியில் பணம் செலுத்தப்பட்டது.
பிளஸ் 1, 2 பொதுத்தேர்வு
49,674 மாணவர்் தயார்
ஈரோடு, ஜன. 25-
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 13ல் துவங்கி, ஏப்., 3ல் நிறைவு பெறுகிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச், 14ல் துவங்கி, ஏப்., 5ல் நிறைவு பெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை, 12,435 மாணவர்; 13,400 மாணவியர் என, 25,835 பேர் எழுதுகின்றனர். இதேபோல் பிளஸ் 1 தேர்வை, 11,304 மாணவர்; 12,535 மாணவியர் என, 23,839 பேர் எழுதவுள்ளனர். இதில் தனித்தேர்வர் விவரம் சேர்க்கப்படவில்லை. தேர்வெழுத, 105 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித் துறையினர் தெரிவித்தனர்.
கல்வித்துறை அலுவலர்
12 பேருக்கு பதக்கம்
ஈரோடு, ஜன. 25-
ஈரோட்டில் நாளை நடக்கும் குடியரசு தின நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கு பதக்கம், சான்றிதழை கலெக்டர் வழங்குகிறார். இதன்படி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையை சேர்ந்த, 12 பேர், சிறந்த பணிக்காக பதக்கம், சான்றிதழ் பெறவுள்ளதாக, அத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அன்னதான திட்டம் நிறைவு
ஈரோடு, ஜன 25-
வள்ளலாரின், 200வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த அக்., முதல், 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில், தொடர் அன்னதான திட்டம் செயல்படும் என்று, அரசு அறிவித்தது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் திண்டல் வேலாயுத சுவாமி கோவில், சென்னிமலை முருகன் கோவில், அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில்களில், வள்ளலார் தொடர் அன்னதான திட்டம் கடந்த, 23ம் தேதி தொடங்கியது. இந்த திட்டம் இன்று நிறைவடைவதாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மயங்கி கிடந்தவர் சாவு
ஈரோடு, ஜன. 25-
ஈரோடு பஸ் ஸ்டாண்டில், டவுன் பஸ் நிற்கும் பகுதியில், கடந்த, 22ம் தேதி இரவு, 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். தகவலின்படி சென்ற டவுன் போலீசார் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார். பெயர் ராஜேந்திரன், 55. என்பது மட்டும் தெரிந்தது. எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட பிற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.1.34 லட்சம்
பறிமுதல்
ஈரோடு, ஜன. 25-
கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிப்படி, ஈரோடு வெண்டிப்பாளையம் ரயில்வே கேட் அருகே நேற்று காலை, நிலை கண்காணிப்பு குழு எண்-1 அதிகாரிகள், வாகன தணிக்கை செய்தனர்.
கரூரில் இருந்து ஈரோட்டுக்கு பைக்கில் வந்த கரூரை சேர்ந்த கவின், 28, என்பவரிடம், 1.34 லட்சம் ரூபாய் இருந்தது. கரூர் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஈரோட்டில் உள்ள சிலருக்கு வட்டிக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்ததாக கூறினார்.
ஆனால், இது தொடர்பான முறையான ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைத்தனர். மாவட்ட கருவூலத்தில் பணம் செலுத்தப்படும். அங்கு உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுச் செல்லலாம் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
'ஓட்டுக்கு பணம் பெறாதீர்'
விழிப்புணர்வு பிரசாரம்
ஈரோடு, ஜன. 25-
ஓட்டுக்கு பணம் பெறாதீர் எனக்கூறி, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமையிலானோர், ஈரோட்டில் நேற்று பிச்சை எடுத்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பணம் பெற்று கொண்டு தேர்தலில் ஓட்டுப்போடாதீர்கள். இதனால் தேர்தல் தோற்கும். ஜனநாயகம் பாதிக்கப்படும். எனவே, ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது என்பதை விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்துகிறோம். ஜனநாயகம் பேசும் அரசியல் கட்சிகள், பணம் கொடுத்து தான் ஓட்டு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதை மாற்றுங்கள். வேட்பு மனு தாக்கலுக்குப்பின் அதிக அளவில் பிரசாரம் மேற்கொள்வோம். இவ்வாறு கூறினார்.
ஓட்டுப்பதிவு நேரம்;
ஆணையத்துக்கு கடிதம்
ஈரோடு, ஜன. 25-
தமிழகத்தில் கடந்த, 2021 சட்டசபை தேர்தலின்போது கொரோனா பரவல் இருந்தது. இதனால் ஓட்டுப்பதிவு காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை தேர்தல் நடந்தது. தற்போது கொரோனா பரவல் இல்லை. மேலும் கடந்த முறை, 350 ஓட்டுச்சாவடியாக இருந்தது, 238 ஓட்டுச்சாவடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுச்சாவடியில் அதிகபட்சம், 1,400 வாக்காளர் வரை ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர்.
எனவே பழைய முறைப்படி காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை மட்டும் ஓட்டுப்பதிவு நேரத்தை அனுமதிக்க வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஓட்டு எண்ணிக்கை நடக்கும்
ஐ.ஆர்.டி., வளாகம் ஆய்வு
ஈரோடு, ஜன. 25-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, சித்தோடு ஐ.ஆர்.டி., கல்லுாரியில், மார்ச், 2ல் நடக்கிறது. இங்கு ஓட்டுப்பெட்டிகள் வைக்கும் அறை, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறை, கணினி மற்றும் கண்காணிப்பு பணி அறைகளை, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நேற்று ஆய்வு செய்தனர். தேர்தல் ஆணைய உத்தரவுப்படி எந்தெந்த அறைகளில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்படும். எங்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்ற விபரங்கள் பிறகு அறிவிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மசாலா பொடிகள் தயாரிப்பு
இலவச பயிற்சிக்கு அழைப்பு
ஈரோடு, ஜன. 25-
ஈரோடு, கொல்லம்பாளையம், பைபாஸ் சாலை பஸ் நிறுத்தம் அருகே, ஆஸ்ரம் மெட்ரிக் உயர்நிலை பள்ளி, 2ம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பிப்., 1 முதல், 11 வரை அனைத்து வித மசாலா பொடி, அப்பளம், ஊறுகாய் தயாரித்தல் தொடர்பாக இலவச பயிற்சி நடக்க உள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்வோர், அவர்களது குடும்பத்தார், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், 18 முதல், 45 வயதுக்கு வரை உள்ள ஆண், பெண்கள் பங்கேற்கலாம். பயிற்சி, மதிய உணவு, சீருடை இலவசம். தகுதியானவர்கள், 0424 2400338 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்.
2,600 டன் ரேஷன்
அரிசி வருகை
ஈரோடு, ஜன. 25-
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு, சரக்கு ரயிலில், 2,600 டன் புழுங்கல் அரிசி ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு நேற்று காலை வந்தது. லாரிகளில் ஏற்றி பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் ரேஷன் கடைகள் மூலம், கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.
பறிமுதல் பொருள், தொகையை
திரும்ப பெற குழு அமைப்பு
ஈரோடு, ஜன. 25-
இடைத்தேர்தல் நடத்தை விதியால், ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட பகுதியில், வாகன சோதனை தீவிரம் அடைந்துள்ளது. இதில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிசுப்பொருட்கள், மது கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்த பொருட்களை திரும்ப பெற, மாவட்ட அளவில் மேல் முறையீட்டு குழு, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கலெக்டர், செலவின கண்காணிப்பு அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்), மாவட்ட கருவூல அதிகாரி கொண்ட குழு செயல்படுகிறது. இதுபற்றி கூடுதல் விபரத்தை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) தொலைபேசி எண்: 1800 425 0242 மூலம் தொடர்பு கொண்டு அறியலாம் என்று, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
தேர்தல் புகார் தெரிவிக்க
எண்கள் வெளியீடு
ஈரோடு, ஜன. 25-
ஈரோடு கிழக்கு தொகுதியில், தேர்தல் நடத்தை விதிகள் குறித்த புகார்களை தெரிவிக்க, ஆறு குழுக்களின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அலுவலர் - 1800 425 0424, 0424 2256782, 0424 2267672; தேர்தல் நடத்தும் அலுவலர் - 1800 425 94890; பறக்கும் படை குழு எண்-1: 7094488017; பறக்கும் படை குழு எண்-2: 7094488049; பறக்கும் படை குழு எண்-3: 7094488072; நிலை கண்காணிப்பு குழு எண்-1: 7094488076; நிலை கண்காணிப்பு குழு எண்-2: 7094488982; நிலை கண்காணிப்பு குழு எண்-3: 7094488983 ஆகியோரை, இந்த எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
27ல் பி.எப்., குறைதீர் கூட்டம்
ஈரோடு, ஜன. 25-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பிலான குறைதீர் கூட்டம், பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மைய கூட்ட அரங்கில் வரும், 27ல் நடக்க உள்ளது. காலை, 10:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை சந்தாதாரர்கள்; மதியம், 2:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை தொழிலதிபர்களுக்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.
ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
தாராபுரம், ஜன. 25-
மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், தாராபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் தலைமை வகித்தார்.
ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர், எல்.ஐ.சி., அலுவலகம் வரை, ஊர்வலமாக சென்றனர்.
புதிதாக அமல்படுத்தியுள்ள, நான்கு சட்டத் தொகுப்புகளை கைவிடக் கோரியும், தொழிலாளர் விரோத மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.
அ.ம.மு.க.,வினர் தெருமுனை பிரசாரம்
தாராபுரம், ஜன. 25-
அ.ம.மு.க., சார்பில், தாராபுரத்தில் நேற்று தெருமுனை பிரசாரம் நடந்தது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 106வது பிறந்தநாளை ஒட்டி, பழைய நகராட்சி அலுவலகம் முன் நடந்த தெருமுனை பிரசாரத்துக்கு, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ராஜேந்திரன், செல்லத்துரை, சிவராம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆதார் எண்-மின் இணைப்பு
31க்குள் இணைக்க அழைப்பு
தாராபுரம், ஜன. 25-
ஆதார் எண்ணுடன், மின் இணைப்பை இணைக்க, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாராபுரம் கோட்டத்தில், 20 பிரிவு அலுவலகங்களில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, சிறப்பு கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது.
வரும், 31க்குள், 100 சதவீத மின் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, 74 சதவீத மின் இணைப்புகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அரசுப்பள்ளி ஆசிரியையிடம் ௪ பவுன் சங்கிலி பறிப்பு
காங்கேயம், ஜன. 25-
காங்கேயம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியையிடம், நான்கு பவுன் தங்கச்சங்கிலியை, பல்சர் பைக் ஆசாமிகள் பறித்து சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் முத்துாரை சேர்ந்த முருகேசன் மனைவி ஜீவா, 42; ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியை. பள்ளி முடிந்து நேற்று மாலை, வழக்கம்போல் மொபட்டில் வீட்டுக்கு சென்றார்.
பல்சர் பைக்கில் பின் தொடர்ந்து வந்த இரு ஆசாமிகள், வேலாயுதம்பாளையம் அருகே இடைவிடாமல் ஏர்-ஹாரன் அடித்து பயமுறுத்தவே, மொபட்டை மெதுவாக இயக்கியுள்ளார். அப்போது பைக் பின்னால் அமர்ந்து வந்த ஆசாமி, ஜீவா அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொள்ள, பைக் மின்னல் வேகத்தில் பறந்து விட்டது. இதுகுறித்த புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து, பைக் கொள்ளையரை தேடி வருகின்றனர்.
நில அளவை அலுவலர்கள்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோபி, ஜன. 25-
தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சங்கம் சார்பில், 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோபியில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும்.
நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரையிலான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பிளாஸ்டிக் கடையில் தீ
ரூ.60 ஆயிரம் சேதம்
ஈரோடு, ஜன. 25-
ஈரோடு, கொல்லம்பாளையம், கல்யாணசுந்தரம் வீதியில் உள்ள டைனமிக் பஜார், பிளாஸ்டிக் கடையில் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் திடீரென கரும்புகை தொடர்ந்து வெளியேறியது. இதைப்பார்த்த பக்கத்து கடைக்காரர், ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை, 15 நிமிடங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இதில் கோன் ஐஸ்கிரீம் தயாரிக்கும் மெஷின், பிளாஸ்டிக் பொருள் என, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகி விட்டது. மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement