வாஷிங்டன்: கடந்த 2019 ல் இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத போரை நடத்த இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் மைக் பாம்பியோ, எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார்.
கடந்த 2019 ம் ஆண்டு பிப்., மாதம் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு காஷ்மீரின் புல்வாமாவில், துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்சை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாபாகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் உருவானது. அந்த காலகட்டத்தில் பாகிஸ்தானில் இருந்த எப்.16 போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இந்திய விமானம் ஒன்றும் சுடப்பட்டது.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த போது, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மைக் பாம்பியோ தனது அனுபவங்களை 'Never Give an Inch: Fighting for the America I Love' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே உறவு தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 2019ம் ஆண்டு பிப்., மாதம் இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத போரை நடத்த இருந்த விவகாரம் உலகிற்கு எந்தளவுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது. ஆனால், இந்த இரு நாடுகளும் அணுஆயுத போருக்கு நெருங்கின. அது எனக்கு நன்கு தெரியும். அப்போது நான் வியட்நாமின் ஹனோய் நகரில் தங்கியிருந்தேன்.
பாகிஸ்தானின் தளர்வான பயங்கரவாத கொள்கை காரணமாக, காஷ்மீரில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானிற்குள் நுழைந்து இந்தியா வான்வெளி மூலம் தாக்குதல் நடத்தியது. அப்போது நடந்த மோசமான சண்டையில், இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. இந்திய விமானி பாகிஸ்தானிடம் பிடிபட்டார்.
உடனடியாக நான் இந்திய வெளியுறவு அமைச்சரிடம் (சுஷ்மா சுவராஜ் ) பேசினேன். அப்போது அவர், இந்தியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே, தனக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுக்க இருக்கிறது எனக்குறிப்பிட்டார்.
அப்போது நான், எதையும் செய்துவிடாதீர்கள்; எனக்கு ஒரு நிமிடம் மட்டும் தாருங்கள்' என்று கூறினேன்.
உடனடியாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனுடன் இணைந்து பாகிஸ்தானின் உண்மையான தலைவராக இருந்த ராணுவ தளபதி கமர் ஜாவேத்தை தொடர்பு கொண்டேன்.
இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியதை அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் இது உண்மையல்ல எனக்கூறியதுடன், இந்தியாதான், பாகிஸ்தான் மீது அணுஆயுத போரை நடத்த தயாராகி வருவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமே மற்றொரு நாட்டுக்கு எதிராக அணு ஆயுத போரை நடத்தும் எண்ணம் இல்லை என்பதை புரிய வைப்பதற்கு எனக்கு சில மணி நேரம் தேவைப்பட்டது. ஒரு பயங்கரமான விளைவை தவிர்க்க, அந்த இரவில் நாங்கள் செய்ததை வேறு எந்த நாடும் செய்திருக்க முடியாது. இவ்வாறு அந்த புத்தகத்தில் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
சுஷ்மா குறித்து விமர்சனம்
மேலும், அந்த புத்தகத்தில் 2014 முதல் 2019 வரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் பற்றியும் மைக் பாம்பியோ குறிப்பிட்டுள்ளார்.
சுஷ்மா குறித்து பாம்பியோ கூறுகையில், இந்திய தரப்பில், இந்திய வெளியுறவு கொள்கையில் சுஷ்மா சுவராஜ் முக்கியமானவராக இல்லை. மாறாக நான், பிரதமர் மோடிக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவரான அஜித் தோவலுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றினேன்.
நான் இரண்டாவதாக இணைந்து பணியாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். 2019 ல் இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சரை 'ஜே' என அழைத்து வரவேற்றேன். அவரை விட சிறந்த வெளியுறவு அமைச்சராக எதிர்பார்க்கவில்லை.
நான் அவர் பேசும் 7 மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று . தொழில்முறை கற்றவர், பகுத்தறிவு மற்றும் தனது தேசம் மற்றும் தலைவரின் முக்கியமான பாதுகாவலராக இருக்கிறார் என பாம்பியோ கூறியுள்ளார்.
எதிர்ப்பு
சுஷ்மா குறித்த பாம்பியோவின் கருத்து தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது: பாம்பியோ புத்தகத்தில் சுஷ்மா சுவராஜ் பற்றி குறிப்பிடும் பகுதியை நான் பார்த்தேன். எப்போதும், அவரை நான் மதிக்கிறேன். அவருடன் நெருக்கமான மற்றும் அ ன்பான உறவை வைத்திருந்தேன். அவரை பற்றி குறிப்பிடும் அவமரியாதையான வார்த்தைகளை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
வாசகர் கருத்து (3)
அவமரியாதையாக அப்படி என்ன சொல்லிவிட்டார் ?
வாய்ப்பே இல்லை ...... பகை மூட்டிவிடுவதில் அமெரிக்காவுக்கு நிகர் amer
இப்போ இருக்கும் அமெரிக்க அதிபர் அந்த நாட்டில் முக்கியமானவரா இல்லை