வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ வீட்டுக்கடன் வாங்கி இருப்போருக்கு, ஒவ்வொரு மாதமும் மிகப்பெரிய செலவு, வீட்டுக்கடனுக்கு இ.எம்.ஐ செலுத்துவதாக இருக்கும். சமீபத்திய ரெபோ வட்டி விகித உயர்வால், வீட்டுக்கடனுக்கான இ.எம்.ஐ அல்லது திரும்ப செலுத்தும் காலம் மேலும் நீட்டிக்கப்படுவதால் நிதி நிலைமை மேலும் மோசமாகலாம். எனவே முடிந்தவரை, விரைவாக வீட்டுக்கடனை அடைப்பது நலம். அந்தவகையில், எந்தெந்த வழிகளில் வங்கிக்கடனை விரைவாக திரும்ப செலுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.
1.ஆண்டுக்கு ஒருமுறை பகுதியாக தொகை செலுத்துங்கள்:
ஆண்டுக்கு ஒருமுறை ஒருவர் குறிப்பிட்ட தொகையை பகுதியாக முன்கூட்டியே வங்கிக்கடன் கணக்கில் செலுத்தலாம். கடன் தொகையில் 20 முதல் 25 சதவீதம் செலுத்தும்போது, அசல் கடன் தொகை சற்று குறைவதுடன், மாதந்தோறும் செலுத்தக்கூடிய இ.எம்.ஐ தொகை குறையும் அல்லது திரும்ப செலுத்த வேண்டிய தவணை காலம் குறையும். கடன் பெற்றவர்கள், போனஸ் அல்லது ஏதேனும் மொத்தமாக தொகை கிடைத்தால், இதுபோன்று செலுத்த திட்டமிடுவது நல்லது.
2. இ.எம்.ஐ தொகை அதிகரியுங்கள் :
வீட்டுக்கடன் வாங்கும் போது, பொதுவாக வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டி விகிதம், குறைந்த இ.எம்.ஐ தொகையை தேர்வு செய்கின்றனர். இதனுடன், குறைந்த இ.எம்.ஐ தொகைக்கு பதிலாக சற்று அதிக இ.எம்.ஐ தொகையை தேர்வு செய்வதன் மூலம் விரைவாக கடனை முடிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் அளவுக்கு, இ.எம்.ஐ தொகையை அதிகரித்து கொண்டே செல்லலாம்.
3.குறைந்த தவணைக்காலத்தை தேர்ந்தெடுங்கள் :
வாடிக்கையாளர்கள், குறைந்த தவணைக்காலத்தை தேர்வு செய்ய வேண்டும். இதனால் மாதாந்திர இ.எம்.ஐ சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் வங்கிக்கடனுக்கு நாம் செலுத்தும் வட்டி சுமையை இது ஓரளவு குறைக்கும். மேலும் வீட்டுக்கடனை விரைவாக அடைக்க மேலும் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்
முதலாவது, எந்தவொரு மாதமும் இ.எம்.ஐ தொகை செலுத்துவதை தவறவிட்டு விடகூடாது. இது அபராதத்துடன், உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமென்பதால், வேறு கடன்களை பெற முடியாத சூழலுக்கு தள்ளும்.
இரண்டாவது, நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு வட்டி மற்றும் அசல் தொகைக்கும் வரிச்சலுகைகள் கிடைக்கிறது. வருமான வரி கணக்கு தாக்கலின் போது, இதனை குறிப்பிட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை கூட, பகுதியாக செலுத்தி, முன்கூட்டியே கடனை செலுத்த இயலும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!