திண்டுக்கல் தாடிக் கொம்பு ரோட்டில் இந் தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. அங்கு நேற்று காலை துப்புரவு பணியில் திண்டுக்கல்லை சேர்ந்த அமுதா40, இந்திரா50, ஈடு பட்டனர். அப்போது திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கலில்ரகுமான் உள்ளே வந்து இரு பெண்கள் மீதும் மிளகாய் பொடியை துாவி, கை கால்களை கட்டி போட்டுள்ளார்.
அதன் பின் பணிக்கு வந்த திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த வங்கி உதவியாளர் கருப்புசாமி 40, நகை மதிப்பீட்டாளர் மோகன்ராஜ் 45, ஆகியோர் மீதும் ஸ்பிரே, மிளகாய் பொடி துாவி தாக்கி கை கால்களை கட்டிப்போட்டார். பண அறையின் சாவி மேலாளரிடம் இருந்தது. அவர் வருகைக்காக கலில்ரகுமான் காத்திருந்தார். அதற்குள் கருப்புசாமி கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு கலில்ரகுமானை பிடிக்க முயன்றார். இருவரும் தாக்கி கொண்டனர். அதற்குள் மற்றவர்களும் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டனர்.
அனைவரும் சேர்ந்து கலில்ரகுமானை அவர் கொண்டு வந்த கயிறுகளால் கட்டினர். பின் வெளியே வந்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் கலில்ரகுமானை கைது செய்தனர்.
விசாரணையில் கலில்ரகுமான் கூறியதாவது: தனியார் நிறுவன ஊதியம் போதவில்லை. துணிவு திரைப்படத்தில் அஜித் தனி ஆளாக சென்று வங்கியில் கொள்ளையடிப்பார். அதை பார்த்து நானும் அதுபோல் செய்ய முயன்றேன். இவ்வாறு கூறியுள்ளார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஆபாச மார்பிங்: வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர் பட்டியை சேர்ந்த 22 வயது பெண் அழகு கலை நிபுணர். இவர் சில வீடியோ பதிவுகளை வெளியிட்டுஇருந்தார். அதை பார்த்த ஒரு நபர் 2022 ஜூனில் வீடியோ காலில் ஆபாச மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அப்பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பினார்.
இது குறித்து அழகு கலை நிபுணர் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி., சரவணனிடம் புகார் செய்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரித்ததில் மிரட்டல் விடுத்தவர் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பிரதீப் 22, என தெரிந்தது. பி.சி.ஏ., பட்டதாரியான அவரை போலீசார் கைது செய்தனர்.
300 'பைக்'குகள் திருடியவர் கைது
வேலுார் டி.எஸ்.பி., திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு அண்ணாசாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வேகமாக சென்றவரை பிடித்து விசாரித்தனர். அவர், ராணிப்பேட்டை மாவட்டம், ஆனைமல்லுார் கிராமத்தைச் சேர்ந்த சேகர், 47, என்பதும், பைக் திருடரான அவர், வேலுார் மாவட்டத்தில் ஆறு மாதத்தில், 300 பைக்குகள் திருடி, ஆந்திரா மாநிலம், சித்துாரில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும், 24 பைக்குளை, வேலுாரில் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருப்பதும் அறிந்து, போலீசார் அவரை கைது செய்து, அந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
மாணவி கர்ப்பம் விவசாயி தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கர்ணப்பள்ளியைச் சேர்ந்தவர் முனிரத்தினம், 39; விவசாயி. இவருக்கு திருமணமாகி, ஒரு மகன், மகள் உள்ளனர். இவர், அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயதான மாணவியிடம் நெருங்கி பழகினார். மாணவியின் பெற்றோர் வேலைக்கு செல்லும் நேரங்களில் அம்மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 'இதை வெளியே கூறக்கூடாது' என, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவியை, நேற்று முன்தினம் அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்தபோது, மாணவி ஐந்து மாத கர்ப்பம் என, தெரிந்தது. மாணவியின் பெற்றோர் புகார்படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப் பதிந்தனர். போலீசுக்கு பயந்த முனிரத்தினம், நேற்று முன்தினம் தன் கிராமத்திலுள்ள புளியமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
போலி பாஸ்போர்ட்: வங்கதேச நபர் கைது
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று ஷார்ஜா சென்று, கோவை வந்த வங்கதேச வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனைவியை கொன்ற சந்தேக கணவர் கைது
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த அழிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 43; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி புனிதா, 32; இவர், ஆம்பூர் பெரியவரிகம் பகுதியிலுள்ள தொல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகன், மகள் உள்ளனர். ஜெய்சங்கர் குடிபோதையில் தினமும் தகராறு செய்ததால், கடந்தாண்டு அவரை பிரிந்த புனிதா, அதே கிராமத்திலுள்ள தன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
அவரது நடத்தையில் சந்தேகமடைந்த ஜெய்சங்கர், அடிக்கடி புனிதாவிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு குடிபோதையில் வந்த ஜெய்சங்கர், புனிதாவிடம் தகராறு செய்து, கத்தியால் குத்தியதில், சம்பவ இடத்திலேயே புனிதா இறந்தார். வழக்குப் பதிந்த பேர்ணாம்பட்டு போலீசார், நேற்று ஜெய்சங்கரை கைது செய்தனர்.
மகள் காதலால் மனமுடைந்த தந்தை, தாய் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாடு அருகே செட்டிமல்லன்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை 45. விவசாயி. இவரது மனைவி சங்கரம்மாள் 40. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மகள் பி.காம் படித்து வந்தார். மகன் 11ம் வகுப்பு படிக்கிறார். மகள், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த வேறு சமுதாயத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து அவருடன் சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சங்கரம்மாள் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த சின்னதுரை சாயர்புரத்தில் உள்ள தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். முறப்பநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.9 லட்சம் திருடிய வங்கி ஊழியர் கைது
தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில், பூதலுாரைச் சேர்ந்த முருகானந்தம், 31, தற்காலிக ஊழியராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம், பணியாளர் ஒருவர் எண்ணி வைத்திருந்த, 9 லட்சம் ரூபாயை, முருகானந்தம் திருடியுள்ளார்.
தொடர்ந்து, பணம் எண்ணும் பணி முடிந்த பின், 9 லட்சம் ரூபாய் கணக்கில் குறைந்துள்ளது. வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், முருகானந்தம் பணத்தை திருடியது தெரிய வந்தது. வங்கி மேனேஜர் அஜய்குமார், தஞ்சாவூர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகானந்தத்தை கைது செய்தனர்.
'ரேப்' செய்த சிறுமியை திருமணம் செய்தவர் கைது
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தின் நெடுமங்காடு பனவூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, 23 வயது இளைஞர் அமீர் 2021ல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து அமீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின் ஜாமினில் வந்த அமீர், தான் பலாத்காரம் செய்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அவரது குடும்பத்தினரிடம் வற்புறுத்தினார். இதையடுத்து, சமீபத்தில் அச்சிறுமிக்கும், அமீருக்கும் திருமணம் நடந்தது.
இதுகுறித்து கேள்விப்பட்ட சிறுமி படிக்கும் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து அமீர், சிறுமியின் தந்தை, திருமணம் செய்து வைத்த மசூதியின் மதகுரு ஆகியோர் மீது, குழந்தை திருமண தடுப்பு சட்டம், 'போக்சோ' உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.
பெற்றோரை சுட்டு கொன்ற மகனுக்கு 'துாக்கு'
சத்தீஸ்கரில், சொத்து தகராறில் பெற்றோர் ராவல்மல் ஜெயின், 72, சுர்ஜி தேவி, 67 ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மகன் சந்தீப் ஜெயினுக்கு, துாக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து (8)
அந்த தாய் தந்தை மகன் ஆகியோர் மகளுக்கு அவ்வளவு நகைளும் போட்டு அழகு பார்த்ததற்கு இப்படி ஓர் வருத்தம்.
படத்தை பாத்து ஐடியா குடைச்சுதா? தல மாதிரி தாடியும், அதே மாதிரி துப்பாக்கியும் எடுத்துக்கிட்டு போகலியா? என்னத்த படம் பாத்தே?
ஆஹா விஜய் ரசிகர்கள் என்னாவது ?அவர் படத்தை பார்த்து அதைப்போல ஏதாவது செய்யுங்கப்பா ,பொழுது போகும்.
ஓஹோ சிலிண்டர் தானாக வெடித்த கோவை இன்சிடென்ட் மாதிரி இங்கேயும் ஏதாவது உருட்டப்படும்
நல்ல படம் எடுத்தா இவங்க ஒருத்தரும் அந்த படங்களை பார்க்கிறதே கிடையாது ....